Thursday, June 28, 2007

பிரதீபா தகுதியானவரா?

காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்படுகின்றன. குற்றச்சாட்டுகளில் ஒரு சில இதோ:
- கொலை வழக்கில் சிக்கிய தனது அண்ணனை, தனது அரசியல் செல்வாக்கால், சட்டத்தின்பிடியில் இருந்து காப்பாற்றினார்

- தனது குடும்பச் சர்க்கரை ஆலைக்காக வாங்கிய 17.5 கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை
- பள்ளி ஆசிரியர் ஒருவரின் தற்கொலைக்கு பிரதீபாவின் கணவர் திரு. தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் தான் காரணம் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
- முஸ்ஸீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவேண்டும்; முஸ்ஸீம் பெண்கள் பர்தா அணியத் தேவையில்லை என்று சற்றும் தேவையில்லாமல் பிரச்சினைக்குரிய வகையில் பேசி தனது முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியிருக்கிறார்
- ஆவிகளுடன் பேசி, பின்னால் நடக்கக் கூடியதை முன்னாலே அறிந்துகொள்வார் என்று ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு

இவையெல்லாம் உண்மையா என்று அறிந்துகொள்வது சிரமம் என்றாலும், நெருப்பு இல்லாமல் புகையாது என்றே தோன்றுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுக்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே ஒரு விபத்து தான். குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட பல நபர்களை இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் தான், கடைசியில் வேறு வழியே இல்லாமல், திரு. கருணாநிதி அவர்களின் சாதனை என்று புரளி கிளப்பி விடப்பட்டு, சற்றும் எதிர்பாராத விதமாக பிரதீபா பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதி என்பதும், அமைச்சராகப் பணியாற்றியதும் பலரும் அறிந்ததுதான். ஒருவேளை அந்த குப்பைகளையெல்லாம் கிளறினால், இன்னும் பல சிறு பெரு புழுக்கள் வெளிவரக்கூடும்.

குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்க, பிரதீபாவை விட பொருத்தமான எத்தனையோ நல்ல மனிதர்கள் இந்தியாவில் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். இனியும் காலம் கடத்தாமல், வேட்பு மனுவை விலக்கிக்கொள்ளும் நாள் வரைக் காத்திருக்காமல், பிரதீபா ஒரு பெண் என்று சொல்லி ஊரை ஏமாற்றாமல், பிரதீபாவுக்குப் பதிலாக புதிய வேட்பாளரை அறிவிக்கவேண்டும். காங்கிரஸ் கட்சியும், கலைஞரும் உடனடியாகக் களமிறங்கி காரியமாற்றவேண்டும். நன்றி.

No comments: