Showing posts with label இணைய வீடியோ. Show all posts
Showing posts with label இணைய வீடியோ. Show all posts

Monday, March 3, 2014

தேம்பாவணி - சிற்றுரை

வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான  தேம்பாவணிபற்றி  நான் ஆற்றிய சிற்றுரை.

நன்றி.

Sunday, June 12, 2011

திருக்குறள் ஒப்புவித்தல்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றாள் எனது ஏழுவயது மகள் ஷர்லி.


Monday, January 21, 2008

தமிழ்த்தாய் வாழ்த்து

வாசிங்டனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார் எனது 4 வயது மகள் ஷர்லி பெனடிக்ட்

Sunday, November 25, 2007

வாசிங்டனில் தீபாவளி மற்றும் குழந்தைகள் விழா 2007


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக "தீபாவளி மற்றும் குழந்தைகள் விழா 2007", நவம்பர் மாதம் 17-ம் நாள் மேரிலாந்தில் நடைபெற்றது. நானறிய தமிழ்ச் சங்க விழாக்கள், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டதே கிடையாது. இதனால் மக்களும் நேரத்திற்கு வந்ததே கிடையாது. பெரும்பாலான நிகழ்ச்சி நிரலில், மிகக் குறைந்தபட்ச விவரங்கள் மட்டுமே இருக்கும். உதாரணமாக, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 7:30 மணிக்கு உணவு, 9:00 மணிக்கு இசை நிகழ்ச்சி என்று இருக்கும். என்ன கலை நிகழ்ச்சி, யார் பங்கேற்கிறார்கள், எத்தனை நிமிடம் போன்ற விசயங்கள் இருக்காது. நிகழ்ச்சி நிரலே தெளிவாக இல்லாததால், நிகழ்ச்சிகளும் பல குழப்பங்களுடன் நடந்தேறும். இது பார்வையாளர்களை நோகடிக்கும்.


2007-ம் ஆண்டுக்கான தேர்தலில் நான் சங்கத்தின் இயக்குநராக வென்றதையடுத்து, எனது கலைத் திறமைகளை அறிந்த சங்கத்தின் தலைவர் அவர்கள், கலை நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்தார்கள். இவ்வாண்டின் முதல் நிகழ்ச்சியான தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கு, தெளிவான நிகழ்ச்சி நிரலை நான் தயாரித்து, நிகழ்ச்சிக்கு முந்தின நாள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தோம். அதன் பிறகும் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், விழாவின் போது சிறிது குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும், வழக்கமான தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளை விட, இந்த விழா சிறப்பான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த முத்தமிழ் விழாவில், என்னுடைய பங்களிப்பு அவ்வளவாக இல்லாமல் போனது.


இந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தீபாவளி நிகழ்ச்சிக்கான திட்டமிடலை என் மனதுக்குள் முடுக்கிவிட்டேன். யார் யார் என்ன நிகழ்ச்சி நடத்த விரும்புகிறார்கள் என்பதை பல தரப்பினரிடமிருந்தும் சேகரித்து, இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர்களிடம் நானே தொடர்புகொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பினை உறுதிசெய்தேன்; அவர்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும் அறிந்துகொண்டேன்; நன்றாக ஒத்திகை செய்யுமாறு உற்சாகப்படுத்தினேன். அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் எவ்வளவு என்பதை மிக அழுத்தமாகச் சொன்னேன்.


ஒவ்வொரு நிகழ்ச்சியைப்பற்றியும் போதுமான அளவுக்கு எனக்கு தெளிவு கிடைத்தது. விழா மேடையில், நிகழ்ச்சிகளின் சுருதி ஏறுமுகத்தில் இருக்குமாறு பார்த்து, எத்தனை மணிக்கு என்ன நிகழ்ச்சி, நிகழ்ச்சியின் தலைப்பு, பங்கேற்பாளர்களின் பெயர், பயிற்றுவித்த ஆசிரியர் என அத்தனை விவரங்களோடும், மிகத் தெளிவான நிகழ்ச்சி நிரல் ஒன்றினைத் தயாரித்து, சங்க நிர்வாகிகளின் ஒப்புதலோடு, சங்க உறுப்பினர்களுக்கு, விழாவுக்குப் பல நாட்கள் முன்னதாகவே அனுப்பி வைத்தோம். இவ்வளவு தெளிவான நிகழ்ச்சி நிரலை மின்னஞ்சலில் கண்ட உறுப்பினர்களுக்கும், தங்களது பெயர் நிகழ்ச்சி நிரலில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரித்தது. பலர் இந்த நிகழ்ச்சி நிரலை மற்ற நண்பர்களுக்கும் மின்னஞச்சலில் அனுப்பினார்கள். இது முதல் வெற்றி.


இந்த நிகழ்ச்சி நிரலில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்யக் கூடாது; அதுபோல நிறைய பேர் பங்கேற்பதால், விழாவை குறித்த நேரத்திற்கு தொடங்கியாக வேண்டும் என்ற என் கருத்துக்கு எங்கள் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதுதான் ஒரே நிகழ்ச்சி நிரல் என்பது உறுதியாகிவிட்டதால், நிகழ்ச்சிக்கு ஓரிரு நாள் முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை நான் தொடர்புகொண்டு, இத்தனை மணிக்கு உங்களது நிகழ்ச்சி என்பதை ஆணித்தரமாகச் சொன்னேன். இது அவர்களை மிகுந்த பொறுப்போடு செயல்பட வைத்தது; சரியான நேரத்திற்கு அவர்களை அரங்கத்திற்கு வர வைத்தது. இது இரண்டாவது வெற்றி.


விழாவின் மற்ற வெற்றி அம்சங்கள்:-

- மூன்று வயது கூட நிறையாத குழந்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தியது

- நான்கு பேரின் உதவியோடு, 24 சிறுவர்களை ஒரே நேரத்தில் வைத்து பெண் ஒருவர் வினாடி வினா நடத்தியது

- அதிகம் ஆங்கிலம் கலக்காமல், அரங்கத்தினரைக் கவரும் வகையில் அழகுத் தமிழில் நான் பேசி, பெண் ஒருவரோடு இணை அறிவிப்பாளராக செயல்பட்டது

- வழக்கமாக தமிழ்ச் சங்கத்துக்கு வரும் பல குடும்பங்கள் இம்முறை வர முடியாத நிலையிலும், ஒரு கட்டத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த அரங்கம்

- உணவுக்கு முந்திய நிகழ்ச்சியின் சுருதியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற, 11 சிறுவர் சிறுமியர் பங்கெடுத்த, பல்லே லக்கா பாடலுக்கான நடனம்

- நேரந்தவறாமையில் நான் காட்டிய கண்டிப்பும், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த அதே வரிசைப்படி, ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொன்றுக்கும் இடைவெளியின்றி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நான் நடத்தி கைத்தட்டு வாங்கியதும்

- தமிழ் மக்களின் இலக்கிய அறிவை தூசு தட்டி எழுப்பிய இலக்கிய வினாடி வினா

- 23 பேர் சில குழுக்களாக வந்து, 35 நிமிடம் தொடர்ந்து ஆடிய கிராமிய நடனமும், அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட சிறு இடைவெளியின்போது நான் சிரிப்புகளைச் சொல்லி சமாளித்து பார்வையாளர்களை இருக்கையிலே இருக்க வைத்ததும்

-திரு. சுப. தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தப்பட்ட மெளன அஞ்சலி

- விழாவின் கடைசியில் வந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இறுதியாக, "வாள மீனுக்கும்..." பாடலை நான் பாடியபோது கூட்டத்தினர் மேடையில் வந்து ஆட்டம்போட்டது

- 4 மணி நேரத்தில் மொத்தம் 127 பேர் மேடையில் நிகழ்ச்சி நடத்தியது

- சங்கத்தின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும், தமிழ் மக்களும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதை மனதாரப் பாராட்டியது


விழாவின் குறைகள்:-

- அரங்கத்தின் பின்பகுதியில் ஸ்பீக்கர் இல்லாததை சாதகமாக்கிக்கொண்டு தொன தொனவென பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள்

- உணவு இடைவேளைக்குப் பின்பு நேரந்தவறாமையில் ஏற்பட்ட சிறு பின்னடைவு; இதனால் மக்கள் சிலர் புறப்பட்டு விட்டது

- மூக்கில் இரத்தத்தோடு, முதலுதவி கோரிய பெண்ணுக்கு நான் உதவமுடியாமல் போனது; அப்பெண்ணிடம் இங்ஙனம் மன்னிப்பு கோருகிறேன்


விழா நடத்துவது என்பது ஒரு கூட்டு முயற்சியே என்றாலும், கலை நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கியதில் எனது பங்கு மகத்தானது. தேவைப்பட்ட இடங்களில் மட்டும் குறுக்கிட்டு மற்றபடி எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்த சங்கத்தின் தலைவருக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி.


இத்தனை முயற்சிகளையும் தாண்டி, இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமான கூட்டம் ஒன்று இருக்கிறது. விழாவில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தங்களின் குழந்தைகளையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்ள வைத்த வாசிங்டன் வட்டார மறத்தமிழ்க் கூட்டம் தான் அது. நன்றி சொல்ல வார்த்தை இல்லாததால், இந்த விழாவின் முழு வெற்றியையும் எம் மக்களின் மடியில் காணிக்கையாக்குகிறேன்.


இணைய வாசகர்கள் மட்டுமன்றி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், வட்டாரத் தமிழ் மக்கள், நண்பர்கள் என பல நூறு பேர் இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மிகுந்த நிதானத்தோடும், உண்மையோடும் இதனை எழுதியுள்ளேன். தவறேதும் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


அதீத ஆர்வமுடன் நான் செயல்பட்டதால், கடந்த நிகழ்ச்சிகளின்போது எனக்கு முதுகுவலி வந்துவிட்டது. ஒருமுறை நான் முடமாகிப் போனேன். இதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தமுறை அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பல வாரங்களாகவே மிகுந்த கவனமுடன் செயல்பட்டேன். தெய்வத்தின் கருணையால் இன்றுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இனியும் வராது என்றே நம்புகிறேன்.


இப்படி விழா நடத்த மீண்டுமொரு வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால், பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளாமல், வட்டாரத் தமிழ் மக்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பெரும் வெற்றி பெறுமாறு நான் நடத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. வருங்கால நிர்வாகிகள், இக்கட்டுரையைப் புரிந்து செயல்பட்டால், விழா சிறக்கும்; அதுவே இக்கட்டுரையின் நோக்கம்.


வளர்ந்து செழிக்கட்டும் உலகெல்லாம் இயங்கும் தமிழ்ச் சங்கங்களும், அதன் உயிர் நாடியான தமிழ் மக்களும். வெல்க தமிழர் சேனை.

Sunday, October 28, 2007

தீபாவளி பட்டிமன்றம்

சென்ற தீபாவளியன்று நான் நடத்திய பட்டிமன்றம். இது முழுமையான வீடியோ அல்ல; ஒரு சில போட்டோக்களை மட்டுமே கொண்டுள்ளது. அதேபோல ஆடியோவும் சற்றுத் தரம் குறைவாகவே உள்ளது; பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Sunday, September 9, 2007

நானும் பாடுவேன் - மாதா பாடல்

இந்தியத் துணைக்கண்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் வாசிங்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட வேளாங்கன்னி மாதா திருவிழாவில் நான் பாடிய மாதா பாடல் இது.

எச்சரிக்கை: சும்மா என் நினைவுக்காகவே இதை வலைப்பதிவில் இணைத்துள்ளேன். வாசகர்களின் நேரத்தை வீணாக்குவது எனது நோக்கமல்ல! நன்றி.

Wednesday, June 6, 2007

சிரிப்பலைகள் - Stand up Comedy

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு 2007 நிகழ்ச்சியில் நான் வழங்கிய சிரிப்பு நிகழ்ச்சி.
http://video.google.com/videoplay?docid=-2791185509942895599