Thursday, July 12, 2007

தமிழர்த் திருவிழா (FeTNA) 2007 - நேரடி அனுபவம்

அன்பு நண்பர்களே,
அமெரிக்கா மற்றும் கனடாவின் பல்வேறு நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில தமிழ்ச் சங்கங்கள் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு தான் 'வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை'; Federation of Tamil Sangams of North America (FeTNA). கடந்த 2007 ஜூலை 7 முதல் 9 தேதி வரை, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ராலே (Raleigh, NC) நகரில் நடைபெற்ற இப்பேரவையின் தமிழர்த் திருவிழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் கூட, இந்த ஆண்டுதான் நான் முதன் முதலாகச் சென்றிருந்தேன்.

சனி, ஞாயிறுகளில் தான் முக்கிய, முழு நேர நிகழ்ச்சிகள் இருந்தன. ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் பார்வையாளர் கட்டணம் 50 அமெரிக்க டாலர்கள்! சனி, ஞாயிறு இரு நாட்களுக்கும் சேர்த்து 75 அமெரிக்க டாலர்கள்! அது போல் ஒரு நாள் உணவுக்கு 30 அமெரிக்க டாலர்கள்! சனி, ஞாயிறு இரு நாட்களுக்கும் சேர்த்து 55 அமெரிக்க டாலர்கள்! அதிகக் கட்டணம் என்பது சொல்லாமலே புரியக்கூடியதே. ஆனால் அதற்கு மற்றொரு பக்கம் இருக்கிறது. அதாவது இவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கருதும் தமிழ்ப் பற்றாளர்களும் இருக்கிறார்கள் என்பது தான் அது.

நான் காரில் சென்றிருந்தேன். 272 மைல் தூரத்தை மூன்றே முக்கால் மணி நேரத்தில் கடந்தேன். ஹி...ஹி. இன்னும் சிலரும் அவ்வாறே. ஆனால், அமெரிக்கா பெரிய நாடு என்பது நீங்கள் அறிந்ததே. அதாவது, இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் நிறையப் பேர் விமானத்தில் தான் பயணம் செய்யவேண்டும். ஒரிரு நாட்களாவது விடுப்பு எடுத்தாகவேண்டும். நிகழ்ச்சி நடைபெற்ற நாட்களில் ஓரிரு இரவுகள் விடுதிகளில் தங்கவேண்டும். இவற்றையெல்லாம் கணக்கிடும்போது, சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 1,000 முதல் 1,500 வரையிலான அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்பது எனது கணிப்பு. தமிழ் நிகழ்ச்சிக்காக இவ்வளவு செலவு செய்துகொண்டு வருகிறார்களே என்பதை உணரும்போது அவர்களின் தமிழ்ப்பற்றும் தானாகவே நமக்கு விளங்கும். அதாவது, உண்மையான தமிழ்பற்றாளர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இந்தத் தமிழர்த் திருவிழா.

நான் ஒரு தமிழ் உணர்வாளன்; வளர்ந்து வரும் தமிழ்க் கலைஞனும் கூட. நிறைய தமிழர்களுக்கு நான் அறிமுகமாகி வரும் இந்த வேளையில், இந்தத் தமிழர்த் திருவிழாவில் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று எனது சில நண்பர்களும், கலந்து கொள்ளவேண்டாம் என்று மற்ற சில நண்பர்களும் அறிவுறுத்தினர். அதற்கான காரணம் இதோ: இந்த FeTNA அமைப்பில், இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி, இலங்கை உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் இருப்பதனால், இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் பற்றிய பேச்சு எழுவது இயல்பே. விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கம். FeTNA-வுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒருவித புரிந்துணர்வு இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தப் பின்னனியில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டதும், சிகாகோ மேல்சபையாளர் (Congressman) ஒருவரின் இலங்கைப் பயணம் பற்றிய விசாரனைகளும், அது தொடர்பான அவரது வாக்குமூலமும் FeTNA-வுக்கு களங்கம் சேர்த்தன. இதனாலேயே நான் நேரில் சென்று நிலைமையைக் கண்டுவர முடிவெடுத்தேன்.

இந்திய ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்களும், தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களும் FeTNA-வுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். இது FeTNA-வுக்கு ஆறுதலாக அமைந்தது எனலாம். அரங்கத்தின் எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய எந்த ஒரு தடயமும் காணப்படவில்லை. கலை நிகழ்ச்சிகளும் அவ்வாறே அமைந்தன, ஒரேயொரு கவிதை வரியைத் தவிர. இதற்கு முன்னர் நடந்த விழாக்களில், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், இந்த முறைதான் அதுபற்றி யாருமே கருத்துத் தெரிவிக்கவே இல்லை என்றும் சிலர் சொன்னார்கள். ஒருவேளை FeTNA நிர்வாகம்தான் இந்தக் கெடுபிடிக்குக் காரணம் என்றால் அது பாராட்டுக்குரியதே.

இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நான் பார்த்தவரை நிகழ்ச்சிகள் யாவும் வெகு சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொன்ன நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. எந்தப் பேச்சாளருமே ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு துளிகூட கூடுதலாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நான் அறிந்தவற்றுள், நேரம் தவறாமையில் இந்த அளவுக்கு கண்டிப்புடன் செயல்பட்ட முதல் இந்திய நிகழ்ச்சி இது தான். சபாஷ்!

சொற்பொழிவுகள், கவியரங்கம், நடனம், நாடகம், கலந்துரையாடல் என அத்தனை நிகழ்ச்சியுமே, அங்கிருந்த தமிழ் நெஞ்சங்களைக் குளிரவைத்தன. 'இசை இன்பத் தேனையும் வெல்லும்' என்ற தலைப்பில் திண்டுக்கல் திரு. முல்லை நடவரசு அவர்கள் ஆற்றிய உரை பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. 'தமிழ்த் திரைப்படத்தில் தமிழ்' என்ற தலைப்பில் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள் வியர்வை கொட்டக் கொட்ட ஆற்றிய சிறப்புரை, எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது. எப்படி ஒரு நடிகரால் இவ்வளவு பாக்களை கொத்துக் கொத்தாய், ஆக்ரோசத்துடன் அள்ளி வீசமுடிகிறது என்று புரியமால் திகைத்தேன். அரங்கமே எழுந்து நின்று அதிர்வேட்டுக்களை முழங்கியது. திரண்டிருந்த தமிழ்ப்பற்றாளர்களின் தாகத்தைத் தீர்ப்பதாகவே எல்லா நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன என்றால் அது மிகையல்ல.

அதில் நடைபெற்ற திண்டுக்கல் திரு. முல்லை நடவரசு அவர்கள் தலைமையிலான பட்டிமன்றத்தில் நான் பேசினேன். எனது பேச்சு மிகச் சிறப்பாக இருந்ததாக அனைவருமே என்னை நேரில் பாராட்டியதைக் கண்டு மகிழ்ந்தேன். 'பட்டிமன்றப் பாங்கு என்னிடம் நிறைய இருக்கிறது' என்று திரு. முல்லை நடவரசு அவர்கள் சொன்னார்கள். FeTNA தலைவர் திரு. தில்லை குமரன் அவர்களோ, தான் பட்டிமன்றங்களை விரும்பாதவர் என்றும், ஆனாலும் என்னுடைய பேச்சு அவரை உட்கார்ந்து கேட்க வைத்துவிட்டது என்றும் என்னிடம் சொன்னபோது நான் உண்மையிலேயே பெருமைப்பட்டேன். அன்னைத் தமிழுக்கு என்னாலும் சிறிது பணி செய்ய முடிகிறதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். இப்படிப்பட்ட நல்ல பேச்சுத்திறமை எனக்கு எப்படி வந்தது என்று நீதியரசர் திரு. சண்முகம் அவர்கள் என்னிடம் வினவியபோது, அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லாமல் என்னால் இருக்கமுடியவில்லை. இந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட மற்ற சிலரும் இந்தக் கட்டுரையைப் படிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்வது பொய்யல்ல.

இரண்டாம் நாள் இரவு மணி எட்டை நெருங்கியது. இசையமைப்பாளர் திரு. பரத்வாஜ் அவர்களின் இன்னிசை இரவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக ஆரம்பமாயின. பிரிய மனமே இல்லையென்றாலும், மீண்டும் ஒரு 272 மைல் தூரம் நான் காரோட்ட வேண்டியிருந்ததால் புறப்பட்டு விட்டேன். கையும், காலும் காரோட்ட, மனமோ தமிழர்த் திருவிழாவை அசைபோட்டுக் கொண்டே வந்தது. தமிழ் எண்ணங்கள் கடல் அலை போல் என் அடிமனதிலே சத்தமிட்டன. தமிழுக்காய் இன்னும் நிறையச் செய்யத் தூண்டின. அன்னை வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சென்று வந்த திருப்தியோடு இல்லம் திரும்பினேன்.

தனிமனிதன் மீதே எவ்வளவோ குறைகள் இருக்கும்போது, ஒரு அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் என்பது தவிர்க்க முடியாததே. FeTNA என்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் தமிழார்வத்தை தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு தானே ஒழிய, தாயகத்துத் தமிழர்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால், உண்மையிலேயே இதுபோன்ற அமைப்புகளால், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் தமிழ் வளர்க்க இயலும் என்பது திண்ணமே. நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்கும் எல்லாமே FeTNA-வுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கட்டும்!

7 comments:

Anonymous said...

//...இந்த முறைதான் அதுபற்றி யாருமே கருத்துத் தெரிவிக்கவே இல்லை என்றும் சிலர் சொன்னார்கள். ஒருவேளை FeTNA நிர்வாகம்தான் இந்தக் கெடுபிடிக்குக் காரணம் என்றால் அது பாராட்டுக்குரியதே..../

வளர்ந்துவரும் கலைஞர் என சொல்லாமலே தெரிகிறது. உங்கள் 'தமிழ் உணர்வு' நெஞ்சை தொடுகிறது! நன்றி!

-/பெயரிலி. said...

இது நீங்கள்:
/இதற்கு முன்னர் நடந்த விழாக்களில், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், இந்த முறைதான் அதுபற்றி யாருமே கருத்துத் தெரிவிக்கவே இல்லை என்றும் சிலர் சொன்னார்கள். ஒருவேளை FeTNA நிர்வாகம்தான் இந்தக் கெடுபிடிக்குக் காரணம் என்றால் அது பாராட்டுக்குரியதே
FeTNA என்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் தமிழார்வத்தை தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு தானே ஒழிய, தாயகத்துத் தமிழர்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால், உண்மையிலேயே இதுபோன்ற அமைப்புகளால், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் தமிழ் வளர்க்க இயலும் என்பது திண்ணமே. ./
தாராவின் இடுகையில் பெயர் சொல்ல விரும்பாதவர் சொல்வது:
/பிறந்தநாட்டுக்கும் இருக்கும்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு/

:-)
வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்பதை வட அமெரிக்க இந்தியத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்று மாற்றவிரும்புவதாகவே எழுதியிருக்கலாம் ;-)
விடுதலைப்புலிகளோடு பெட்னாவிலே இருந்தவர் ஒருவருக்குத் தொடர்பென்று வழக்கு நடப்பதற்கும் பெட்னாவுக்கும் என்ன சம்பந்தமென்பது கிடக்கட்டும். பெட்னாவின் அமைப்பாளர் ஒருவர் மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார் என்று வழக்கிலே சிக்கியிருந்தால், அதற்கும் பெட்னாவிலே பெண்களைக் கொடுமைப்படுத்துதல் பற்றிப் பேசுவதற்கும் என்ன சம்பந்தம். மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றவர் அப்படியாகச் செய்தார், அப்படியாகச் செய்வது சரி என்று வாதாடினாலே சிக்கல். விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கும் இலங்கைத்தமிழர்களின் நிலையைப் பேசுவதற்கும் வித்தியாசமில்லையா? நல்ல வாதம் :-) விடுங்கள்
பிறந்த நாடும் இருக்கும்நாடும் என்கிறவருக்கும் உங்களுக்கும் உள்ளுக்குள்ளே உறைந்திருக்கும் சூத்திரம், "வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு = வட அமெரிக்க இந்தியத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு." இதை நேரடியாகவே மாற்றிவிட்டால், வெளிப்படையாகவே அஃது இயங்கலாம். தமிழோவியம் பின்னூட்டங்களிலும் சண்டை போட்டுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

பி.கு.: நான் ஒரு தடவையும் ஃபெட்னாவிலே கலந்துகொள்ளவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருக்கும் இலங்கைத்தமிழ்ச்சங்கங்களின் உள்ளே நடக்கும் கூத்துக்களைப் பார்த்திருக்கின்றேன். இவர்களெல்லாம் சிங்களநண்பர்களோ ஆந்திராக்காரர்களோ வட இந்தியர்களோ என்றெல்லாம் இந்தியப்பலசரக்குக்கடைகளிலே எண்ணியவர்களெல்லாம் வந்தோ புரொக்ஸியாகவோ ஆங்கிலத்தமிழ்பேசி தமக்கான தலைவரையும் செயலாளரையும் தேர்ந்தெடுத்துவிட்டுமறைந்து அடுத்த இசை நிகழ்ச்சியின்போது தோன்றுகையிலே மட்டுமேதான், அட்டா இத்தனை "தமிழர்கள்" நமது இலங்கைத்தமிழ்ச்சங்கத்திலேயிருக்கிறார்களா என்று தோன்றும். இந்தியத்தமிழ்ச்சங்கங்களிலும் அப்படியேதும் நடப்பதுண்டா?

just curious :-)

தென்றல் said...

/அதில் நடைபெற்ற திண்டுக்கல் திரு. முல்லை நடவரசு அவர்கள் தலைமையிலான பட்டிமன்றத்தில் நான் பேசினேன். எனது பேச்சு மிகச் சிறப்பாக இருந்ததாக அனைவருமே என்னை நேரில் பாராட்டியதைக் கண்டு மகிழ்ந்தேன்/

வாழ்த்துக்கள்!

நிகழ்ச்சியை பற்றி விரிவாக சொல்லி இருக்கலாமே?

பாகம் 2 உண்டா?

-/பெயரிலி. said...

FeTNA என்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் தமிழார்வத்தை தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு தானே ஒழிய, தாயகத்துத் தமிழர்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்று சொல்லிவிட்டும் Stand up comedy பண்ணுகிறேன் பேர்வழி என்று புலம்பெயர்ந்த தமிழர்களைத் துயர்ப்படுத்துத் தீர்த்துக்கட்டுகின்றவர்களை என்ன செய்வது?
:-)
கோச்சுக்காதீங்க தமாசுதான். உங்கள் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுட்டுத்தான் பின்னாடி போய் உங்கள் stand up comedy நிகழ்ச்சி பார்த்தேன். நன்றாகவே செய்திருக்கின்றீர்கள். அப்போதுதான் விஷயம் பொறிதட்டியது, இந்தநேரடி அனுபவத்தினையும் வஞ்சப்புகழ்ச்சியாக எழுதி அமுக்கியிருக்கின்றீர்களென.
நன்றி.
:-)

Geetha Sambasivam said...

வருகைப் பதிவு மட்டும் போட்டுட்டு படிச்சுட்டு வந்து கமென்டறேன்.

Geetha Sambasivam said...

"தாரா" என்பவர் இன்னும் விரிவாக எழுதி இருந்தார். எனினும் செலவு பற்றி எல்லாம் அவர் குறிப்பிடவில்லை. நீங்கள் சொல்லி இருப்பது செலவு பற்றி நாம் முன்னரே திட்டம் இடவேண்டும், அனைவராலும் இயலாத ஒன்று எனப் புரியவைக்கிறது. மற்ற நிகழ்ச்சிகள் பற்றியும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். பங்கு பெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிடுமாறு பேசியதற்கு வாழ்த்துக்கள்.

Agathiyan John Benedict said...

கீதா,
உங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. 'தாரா' எழுதியிருந்ததை நானும் படித்தேன். நிகழ்ச்சிகளைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். வேறு சிலரும் கூட அப்படியே எழுதியிருக்கக்கூடும். அதனால் தான் நிகழ்ச்சிகளைப்பற்றியே மீண்டும் எழுதாமல், சற்று வேறுபட்டக் கோணத்தில் எழுதியிருந்தேன்.