Sunday, December 2, 2007

கவிதைக் காதல்

பிரசுரமான இதழ்(கள்): வார்ப்பு

கண்களால் காண்பதெல்லாம்
கவிதை உருவம் எடுக்குது
கனவிலும் கவிதைகள்
கலைடாஸ்கோப்பாய் உருளுது


காதல் வளர்க்கும் கருவியாய்
கவிதை வரைந்த காலம்போய்
கவிதை மீதே காதல்கொண்டு
காதல் கவிதை(களும்) வரைகிறேன்


அவள் அன்னம் பரிமாறும் அழகினில்
அடிமனதில் சுரக்குது
அழகுக் கவிதையொன்று;
அரை நிசியிலும் எழுதுகிறேன்
அரை நிர்வாணக் கவிதையொன்று


கல்லடிபடுமாம் காய்ச்ச மரம்-நம்
கள்ளக் காதல் கண்டு பொறுக்கா
கள்வர்களின் கல்லடி தாங்கி
காலமெல்லாம் காத்து நிற்பேன்
கலங்காதே என் புதிய காதலியே!

8 comments:

Anonymous said...

காதலைத் தீண்டாத கவியும் இல்லை
கவியின் பார்வைக்குத் தப்பாத காதலும் இல்லை ..

கள்ளக் காதல் "கவிதையாய்" மட்டுமே இருப்பின்
உள்ளக் காதலி உளமாற மகிழ்வாள் ..

முன்றாம் நடை (பத்தி) கவிதையின் மற்ற நடையுடன் ஒவ்வாது உள்ளது,
கவியின் (தங்களின்) பார்வையில் விளக்கம் உண்டோ?

- நி

Anonymous said...

புரியலைங்களே ஜான்!

-சுரேஷ்பாபு

Agathiyan John Benedict said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, தென்றலைத் தேடி அவர்களே.

உங்களின் கருத்தும் ஒரு கவிதை போலவே உள்ளது. பாராட்டுக்கள்.

எந்தக் காட்சியைக் கண்டாலும், அதனை ஒரு கவிதையாக எழுதிவிட வேண்டுமெனத் தோன்றுகிறது. அதாவது, கவிதை மீதே காதல் வந்துவிட்டது.

//முன்றாம் நடை (பத்தி) கவிதையின் மற்ற நடையுடன் ஒவ்வாது உள்ளது//
உண்மைதான். என் மனைவி அன்னம் பரிமாறுவதைக் காணும்போது, "இதை ஏன் கவிதையாக்கக் கூடாது?" என்று எனக்குத் தோன்றியதுண்டு. அதேபோல், தூக்கத்திலும் எனக்கு நிறைய கவிதை வரிகள் உதித்ததுண்டு. அதைத் தான் அப்படி எழுதியிருக்கிறேன். ஆனால், எல்லா வரிகளுமே 'க' எழுத்தில் ஆரம்பிக்கிறது. இந்த மூன்றாவது பத்தி மட்டும் 'அ' எழுத்தில் ஆரம்பிக்கிறது. அதற்காகவேயினும் அந்தப் பத்தியைத் தவிர்த்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது. நன்றி.

Anonymous said...

// > எந்தக் காட்சியைக் கண்டாலும், அதனை ஒரு கவிதையாக எழுதிவிட வேண்டுமெனத்
> தோன்றுகிறது. அதாவது, கவிதை மீதே காதல் வந்துவிட்டது. //

ம்ம்.. இப்ப கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. ;-)

-சுரேஷ்பாபு

Agathiyan John Benedict said...

விளக்கினால் தான் கவிதை புரிகிறது என்றால், எழுத்தில் ஏதோ பிழை இருப்பதாகவே அர்த்தம். புரியாத வகையில் கவிதை எழுதுபவர்களுக்கெல்லாம் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் -:)

Anonymous said...

எனக்கு ஒருமுறை வாசிப்பிலேயே எளிதாகப்புரிந்தது..புரியவில்லை என்றால் ஆச்சர்யம் தான்........

அருமை ஜான்...

சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)

Agathiyan John Benedict said...

புரியும் என்றுதான் நானும் இட்டேன்; ஆனால் புரியாமல் போய்விட்டது -:(
ஒருவேளை தலைப்பை "கவிதைக் காதல்" என்பதற்குப் பதிலாக "கவிதைக்கே கவிதை" என்று வைத்திருந்தால் புரிந்திருக்குமோ என எண்ணுகிறேன்.

Anonymous said...

> ஒருவேளை தலைப்பை "கவிதைக் காதல்" என்பதற்குப் பதிலாக "கவிதைக்கே கவிதை"
> என்று வைத்திருந்தால் புரிந்திருக்குமோ என எண்ணுகிறேன்.


எதற்கு ??அதுதான் அழகா ,

கவிதை வரைந்த காலம்போய்
கவிதை மீதே காதல்கொண்டு

என்று சொல்லிவிட்டீர்களே..

சாந்தி