வாசிங்டனில் தீபாவளி மற்றும் குழந்தைகள் விழா 2007
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக "தீபாவளி மற்றும் குழந்தைகள் விழா 2007", நவம்பர் மாதம் 17-ம் நாள் மேரிலாந்தில் நடைபெற்றது. நானறிய தமிழ்ச் சங்க விழாக்கள், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டதே கிடையாது. இதனால் மக்களும் நேரத்திற்கு வந்ததே கிடையாது. பெரும்பாலான நிகழ்ச்சி நிரலில், மிகக் குறைந்தபட்ச விவரங்கள் மட்டுமே இருக்கும். உதாரணமாக, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 7:30 மணிக்கு உணவு, 9:00 மணிக்கு இசை நிகழ்ச்சி என்று இருக்கும். என்ன கலை நிகழ்ச்சி, யார் பங்கேற்கிறார்கள், எத்தனை நிமிடம் போன்ற விசயங்கள் இருக்காது. நிகழ்ச்சி நிரலே தெளிவாக இல்லாததால், நிகழ்ச்சிகளும் பல குழப்பங்களுடன் நடந்தேறும். இது பார்வையாளர்களை நோகடிக்கும்.
2007-ம் ஆண்டுக்கான தேர்தலில் நான் சங்கத்தின் இயக்குநராக வென்றதையடுத்து, எனது கலைத் திறமைகளை அறிந்த சங்கத்தின் தலைவர் அவர்கள், கலை நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்தார்கள். இவ்வாண்டின் முதல் நிகழ்ச்சியான தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கு, தெளிவான நிகழ்ச்சி நிரலை நான் தயாரித்து, நிகழ்ச்சிக்கு முந்தின நாள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தோம். அதன் பிறகும் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், விழாவின் போது சிறிது குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும், வழக்கமான தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளை விட, இந்த விழா சிறப்பான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த முத்தமிழ் விழாவில், என்னுடைய பங்களிப்பு அவ்வளவாக இல்லாமல் போனது.
இந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தீபாவளி நிகழ்ச்சிக்கான திட்டமிடலை என் மனதுக்குள் முடுக்கிவிட்டேன். யார் யார் என்ன நிகழ்ச்சி நடத்த விரும்புகிறார்கள் என்பதை பல தரப்பினரிடமிருந்தும் சேகரித்து, இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர்களிடம் நானே தொடர்புகொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பினை உறுதிசெய்தேன்; அவர்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும் அறிந்துகொண்டேன்; நன்றாக ஒத்திகை செய்யுமாறு உற்சாகப்படுத்தினேன். அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் எவ்வளவு என்பதை மிக அழுத்தமாகச் சொன்னேன்.
ஒவ்வொரு நிகழ்ச்சியைப்பற்றியும் போதுமான அளவுக்கு எனக்கு தெளிவு கிடைத்தது. விழா மேடையில், நிகழ்ச்சிகளின் சுருதி ஏறுமுகத்தில் இருக்குமாறு பார்த்து, எத்தனை மணிக்கு என்ன நிகழ்ச்சி, நிகழ்ச்சியின் தலைப்பு, பங்கேற்பாளர்களின் பெயர், பயிற்றுவித்த ஆசிரியர் என அத்தனை விவரங்களோடும், மிகத் தெளிவான நிகழ்ச்சி நிரல் ஒன்றினைத் தயாரித்து, சங்க நிர்வாகிகளின் ஒப்புதலோடு, சங்க உறுப்பினர்களுக்கு, விழாவுக்குப் பல நாட்கள் முன்னதாகவே அனுப்பி வைத்தோம். இவ்வளவு தெளிவான நிகழ்ச்சி நிரலை மின்னஞ்சலில் கண்ட உறுப்பினர்களுக்கும், தங்களது பெயர் நிகழ்ச்சி நிரலில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரித்தது. பலர் இந்த நிகழ்ச்சி நிரலை மற்ற நண்பர்களுக்கும் மின்னஞச்சலில் அனுப்பினார்கள். இது முதல் வெற்றி.
இந்த நிகழ்ச்சி நிரலில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்யக் கூடாது; அதுபோல நிறைய பேர் பங்கேற்பதால், விழாவை குறித்த நேரத்திற்கு தொடங்கியாக வேண்டும் என்ற என் கருத்துக்கு எங்கள் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதுதான் ஒரே நிகழ்ச்சி நிரல் என்பது உறுதியாகிவிட்டதால், நிகழ்ச்சிக்கு ஓரிரு நாள் முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை நான் தொடர்புகொண்டு, இத்தனை மணிக்கு உங்களது நிகழ்ச்சி என்பதை ஆணித்தரமாகச் சொன்னேன். இது அவர்களை மிகுந்த பொறுப்போடு செயல்பட வைத்தது; சரியான நேரத்திற்கு அவர்களை அரங்கத்திற்கு வர வைத்தது. இது இரண்டாவது வெற்றி.
விழாவின் மற்ற வெற்றி அம்சங்கள்:-
- மூன்று வயது கூட நிறையாத குழந்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தியது
- நான்கு பேரின் உதவியோடு, 24 சிறுவர்களை ஒரே நேரத்தில் வைத்து பெண் ஒருவர் வினாடி வினா நடத்தியது
- அதிகம் ஆங்கிலம் கலக்காமல், அரங்கத்தினரைக் கவரும் வகையில் அழகுத் தமிழில் நான் பேசி, பெண் ஒருவரோடு இணை அறிவிப்பாளராக செயல்பட்டது
- வழக்கமாக தமிழ்ச் சங்கத்துக்கு வரும் பல குடும்பங்கள் இம்முறை வர முடியாத நிலையிலும், ஒரு கட்டத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த அரங்கம்
- உணவுக்கு முந்திய நிகழ்ச்சியின் சுருதியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற, 11 சிறுவர் சிறுமியர் பங்கெடுத்த, பல்லே லக்கா பாடலுக்கான நடனம்
- நேரந்தவறாமையில் நான் காட்டிய கண்டிப்பும், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த அதே வரிசைப்படி, ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொன்றுக்கும் இடைவெளியின்றி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நான் நடத்தி கைத்தட்டு வாங்கியதும்
- தமிழ் மக்களின் இலக்கிய அறிவை தூசு தட்டி எழுப்பிய இலக்கிய வினாடி வினா
- 23 பேர் சில குழுக்களாக வந்து, 35 நிமிடம் தொடர்ந்து ஆடிய கிராமிய நடனமும், அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட சிறு இடைவெளியின்போது நான் சிரிப்புகளைச் சொல்லி சமாளித்து பார்வையாளர்களை இருக்கையிலே இருக்க வைத்ததும்
-திரு. சுப. தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தப்பட்ட மெளன அஞ்சலி
- விழாவின் கடைசியில் வந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இறுதியாக, "வாள மீனுக்கும்..." பாடலை நான் பாடியபோது கூட்டத்தினர் மேடையில் வந்து ஆட்டம்போட்டது
- 4 மணி நேரத்தில் மொத்தம் 127 பேர் மேடையில் நிகழ்ச்சி நடத்தியது
- சங்கத்தின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும், தமிழ் மக்களும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதை மனதாரப் பாராட்டியது
விழாவின் குறைகள்:-
- அரங்கத்தின் பின்பகுதியில் ஸ்பீக்கர் இல்லாததை சாதகமாக்கிக்கொண்டு தொன தொனவென பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள்
- உணவு இடைவேளைக்குப் பின்பு நேரந்தவறாமையில் ஏற்பட்ட சிறு பின்னடைவு; இதனால் மக்கள் சிலர் புறப்பட்டு விட்டது
- மூக்கில் இரத்தத்தோடு, முதலுதவி கோரிய பெண்ணுக்கு நான் உதவமுடியாமல் போனது; அப்பெண்ணிடம் இங்ஙனம் மன்னிப்பு கோருகிறேன்
விழா நடத்துவது என்பது ஒரு கூட்டு முயற்சியே என்றாலும், கலை நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கியதில் எனது பங்கு மகத்தானது. தேவைப்பட்ட இடங்களில் மட்டும் குறுக்கிட்டு மற்றபடி எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்த சங்கத்தின் தலைவருக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி.
இத்தனை முயற்சிகளையும் தாண்டி, இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமான கூட்டம் ஒன்று இருக்கிறது. விழாவில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தங்களின் குழந்தைகளையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்ள வைத்த வாசிங்டன் வட்டார மறத்தமிழ்க் கூட்டம் தான் அது. நன்றி சொல்ல வார்த்தை இல்லாததால், இந்த விழாவின் முழு வெற்றியையும் எம் மக்களின் மடியில் காணிக்கையாக்குகிறேன்.
இணைய வாசகர்கள் மட்டுமன்றி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், வட்டாரத் தமிழ் மக்கள், நண்பர்கள் என பல நூறு பேர் இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மிகுந்த நிதானத்தோடும், உண்மையோடும் இதனை எழுதியுள்ளேன். தவறேதும் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
அதீத ஆர்வமுடன் நான் செயல்பட்டதால், கடந்த நிகழ்ச்சிகளின்போது எனக்கு முதுகுவலி வந்துவிட்டது. ஒருமுறை நான் முடமாகிப் போனேன். இதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தமுறை அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பல வாரங்களாகவே மிகுந்த கவனமுடன் செயல்பட்டேன். தெய்வத்தின் கருணையால் இன்றுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இனியும் வராது என்றே நம்புகிறேன்.
இப்படி விழா நடத்த மீண்டுமொரு வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால், பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளாமல், வட்டாரத் தமிழ் மக்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பெரும் வெற்றி பெறுமாறு நான் நடத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. வருங்கால நிர்வாகிகள், இக்கட்டுரையைப் புரிந்து செயல்பட்டால், விழா சிறக்கும்; அதுவே இக்கட்டுரையின் நோக்கம்.
வளர்ந்து செழிக்கட்டும் உலகெல்லாம் இயங்கும் தமிழ்ச் சங்கங்களும், அதன் உயிர் நாடியான தமிழ் மக்களும். வெல்க தமிழர் சேனை.
19 comments:
அனுபவித்து எழுதிரிக்கின்ற்ரிகள்.
organising capacity என்பதும் ஒரு கலை. அனுஒஅவப் படும்பொழுது கஷ்டமாக இருந்தாலும், அது முடிந்தவுடன் ஏற்படும் திருப்தி
மிகப் பெரிது. 35 ஆண்டுகள் அரசில் பணியாற்ரும் பொழுது என்னிடம் தான் விழாப் பொறுப்புகள்,
கருத்தரங்கு பொறுப்புகள் கொடுப்பார்கள்.எனவே
உங்கK கட்டுரையை ரசித்துப் படித்தேன். சின்ன விழாவென்றாலும் தானேசென்று பொறுப்பு
எடுங்கள். அதன் மகிழ்ச்சியை உணர்வீர்கள். முதல் வெற்றிக்கு முத்தான பாராட்டுக்கள்
அன்புடன்
சீதாம்மா
தமிழ்ச்சங்க நிகழ்வைப் பற்றி சுருக்கமாகத் தொகுத்தளிமைக்கு நன்றி. அன்று பெரும்பாலான நிகழ்ச்சிகள் நன்றாகவே ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன. நேரந்தவறாமல் நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்றமையும் வெற்றிக்கு ஒரு காரணம். அதற்குத் தனியாகப் பாராட்டத்தான் வேண்டும்.(நான் அறிந்த வரை இதற்கு முன்பும் பல ஆண்டுகள் நேரம் தவறாமல் கூட்டங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. தொண்ணூறுகளில் முதல் முதலாக அரங்கத்துக்குள் நுழையும் பார்வையாளருக்கு விருதுகள் வழங்கி ஊக்குவித்து நேரந்தவறாமல் நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அண்மையில் குறிப்பாக 2003 ஆம் ஆண்டில் வைராக்கியமாக ஒரு நிமிடம் கூடத் தவறாமல் சரியாக நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.)
இந்த விழாத் தொகுப்பில் முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள். படுகொலை செய்யப் பட்ட ஈழத்தலைவர் சுப.தமிழ்ச்செல்வனுக்கும், அவருடன் மறைந்த போராளிகளுக்கும், பிற அப்பாவி தமிழருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டத்தினர் எழுந்து நின்று இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. விஜய் ஆனந்தும் சுப.தமிழ்ச்செல்வன் பற்றி தன்னுடைய உரையில் விரிவாகக் குறிப்பிட்டுப் பேசியது ஈழத்தமிழர் மேல் அக்கறை கொண்டுள்ள அனைவரையும் நெகிழச்செய்தது. இப்படிப்பட்ட மனிதாபிமானத்தை மறுத்த நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் வாசிங்டன் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழுவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
நன்றி மரியாதைக்குரிய திரு. சுடலை மாடன் (சொ. சங்கரபாண்டி) அய்யா அவர்களே.
தமிழ்ச் சங்கத்தின் மூத்த, துடிப்பான உறுப்பினராகிய உங்களது கருத்துக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சுப. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்ததை குறிப்பிடாததற்காய் வருந்துகிறேன். இப்போதே இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றி.
விமர்சனம், நடத்தியவரே எழுதுவது முறையல்ல. இது தற்புகழ்ச்சி.
> விமர்சனம், நடத்தியவரே எழுதுவது முறையல்ல. இது தற்புகழ்ச்சி.
வேறு வகையில் விமர்சனம் எழுத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேறு யாரும் இங்கு உள்ளனரா ..?
தலைப்பை அனுபவம் என்று
போட்டு எழுதியிருந்தால் மிகச்சரியாக இருந்திருக்கும்.
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
> விமர்சனம், நடத்தியவரே எழுதுவது முறையல்ல. இது தற்புகழ்ச்சி.
இருக்கட்டுமே. அது பொய்மை புகழ்ச்சி இல்லை
அறியாதவர்களுக்கு தம்மை அறிமுகம் சொல்லுவது வழக்கம்தான்.
பாராட்டுக்கள் ஜான்
சில பரிந்துரைகள்:
1. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விருந்தை வைத்துக்கொண்டால் எல்லோரும் சரியான்
நேரத்தில் வந்து விடுவார்கள்.
2. விருந்து அரங்கத்துக்கு தனி கட்டணம் என்றால் விருந்து முடிந்தது உடனேஅதை
ஒப்படைத்து விட்டால் செலவு குறையும்
3. விருந்தின் போதே எல்லோரும் அரட்டை அடித்து ஓய்ந்து விட்டுவாரக்ள். கலை
அரங்கத்தில் பேச்சு குறைவாக இருக்கும்
4. தனி கலைஞர்களை விட குழு பங்கெடுப்புக்கு முன்னுரிமை கொடுத்தால் பல பேருக்கு
வாய்ப்பு கிட்டும். அதனால் பல பேர் விழாவில் கலந்துகொள்ள் வருவார்கள்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
ஆக்க பூர்வமான யோசனைகள்.
organinsing capacity ஒரு talentஎல்லொருக்கும் வந்து விடாது. செது முடிக்கும் பொழுது மனத்தில்
ஒரு சந்தோஷம் ஏற்படும் இதில் ஒரு செய்தி கூற விரும்புகிறேன். அண்ணா ஆட்சி அமைக்கும் முன்னர் ஒரு முறை மாநில மாநாடு நடந்தது.
ஏர்பாடுகள் அனைத்தும் கலைஞர் ஏற்றுக் கொண்டார். மாநாட்டுக்குக் கூட்டம், விளபரங்கள், மற்ரும் கூட்ட நிகழ்ச்சிகல், வருபவர்களுக்கு வசதிகள், எல்லாவற்றிகும் மேலாகக்கூட்டத்திற்கு நிதி வசுல் செயவது உட்பட பொறுப்பேற்றுக் கொண்டார். செலவு போக மீதித்தொகை கட்சிக்குப் போன பொழுது அண்ணா அயர்ந்து
போனார். கட்சியில் கலைஞரின் பலமும் செல்வாக்கும் அதனால் உயர்ந்தது.
ஜான் பெருமை கொள்ளட்டும்/ வேந்தனின் ஆலோசனைகள் ஜானின் வளர்ச்சிக்கு உதவும்.
இது சுயதம்பட்டம் என்று நினைப்பதை விட சுய நம்பிக்கையில் பெருமை என் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
john, PROCEED
சீதாம்மா
ஒரு சங்கத்தின் செயலாளராக இருந்து ஒருங்கிணைந்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் திறம்பட நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். பல சங்கங்களின் நிர்வாக
உறுப்பினராக இருந்து நான் பார்த்திருக்கிறேன் என்பதை விட என் மனைவி செயலாளராகவும், உதவி செயலாளராகவும் இருந்து பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு
செய்த போது கூடவே இருந்து உதவியதன் மூலம் ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்பவும் கூட
ஏதோ ஒரு நடன நிகழ்ச்சிக்காக தினமும் சிறுவர்கள் வீட்டிற்கு வருவதும் பயிற்சிகள்
தொடர்வதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.(போன மாதம் ஒரு நாடக போட்டிக்காக நடந்த பயிற்சிகள் வேறு)
ஆகவே நண்பர் ஜான் வாசிங்டன் தமிழ் சங்க நிகழ்ச்சிகளை பற்றி எழுதியது தவறே இல்லை. அவர் வரைக்கும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்ற திருப்தியில் எழுதியிருக்கிறார். குற்றம் குறைகளையும் சுட்டியிருக்கிறார் என்பதையும் நாம்
நினைவில் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு சிறுமிக்கு தன்னால் உதவ முடியாததை எண்ணி மனப்பூர்வமாக வருந்தியிருக்கிறார். இதை அவர் இங்கு எழுதாமல்
கூட இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை என்பதிலிருந்தே அவர் எழுதியது சரியாகத்தான் இருக்கும் என நாம் நம்பலாம். அந்த திருப்தியை நாம்
தற்பெருமை என கொள்வது சரியா என்பது யோசிக்கவேண்டிய விசயம். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் வேறு யாரேனும் நிகழ்ச்சியைப்பற்றிய குறைகள் இருப்பின் விமர்சனம் செய்தால் மட்டுமே நமக்கு தெரியும். அது போல யாரும் நம்
குழுமத்தில் இல்லை என்ற நிலையில் நல்லதொரு நிகழ்ச்சியை ஜான் திறம்பட செய்திருக்கிறார் என்ற நிலையில் அவரை பாராட்டுவதே முறையாகும்.
வாழ்த்துக்கள் நண்பரே.
இப்படி விழா நடத்த மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுக்கள்!!
Keep it up John!
Fr. Russel Raj, OCD
ஜான் ஐயா...
ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க...உங்களோடு சேர்ந்து பங்கெடுக்க யாருமே இல்லையா?! வேலைகளைப்பிரித்துக் கொடுத்தால் நல்லதுதானே
--
என்றென்றும்
சுதனின்விஜி
அன்பின் ஜான்,
உங்கள் "பவ்யம்" தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வாழ்த்துகள். இதேபோல தொடருங்கள்.
அன்புடன்,
குமார்(சிங்கை)
ஒரு தனி கேள்வி.
இந்த நிகழ்ச்சிகளில் ரவிச்சந்திரன் - மீரா என்ற தம்பதியினர் கல்ந்து கொண்டதாக நினைவில் வருகிறதா ?
நன்றி திரு. john benedict ( என் அண்ணவின் பெயர்)...
விழாவை நேரில் ரசித்தது போருலிருந்தது...
இங்கு முதல் வருடம் சுமார் 20 குழந்தைகள் வைத்து, தனியாக நான் மட்டும்,xmas விழா நடத்தினேன்...
அடுத்த வருடம், நம்ப முடியாமல், வடநாட்டினரும், hindus, pakistanis,மிக ஆவலுடன்
எனக்கு உதவிட முன் வந்தார்கள்...
எதயும் எதிர்பாக்காமல் செய்வதே ஒரு தனி சுகம்தான்.
இப்போது இது வழக்கமாகிவிட்டது...
தொடருங்கள் உங்கள் சேவையை..
--
சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
A person without a sense of humour is like a wagon without springs. It's
jolted by every pebble on the road.Good humour is one of the best articles
of dress one can wear in society .
http://punnagaithesam.blogspot.com/
வாள மீன் பாட்டு மட்டுமல்ல, தங்கள் ஆட்டமும் நன்றாக இருக்கு. தங்கள் கடின உழைப்புக்கும், அமைப்பின் பால் தங்களுக்கு உள்ள அதீத ஈடுபாடும் நிகழ்ச்சியின் வெற்றி பிரதிபலிக்கிறது. இதை தங்கள் சங்க நிர்வாகிகள் புரிந்து கொண்டு மேலும் தக்க (recognition) அங்கீகாரம் வழங்க என் வாழ்த்துக்கள்.
John,
Hope you are doing fine. I missed the function. I read some of the comments you wrote. I could see how difficult to bring such a large gathering. Keep it up. I wish, you will lead more functions in the near future. Good luck.
Regards,
Johnson
ஜான் லேசுப் பட்டவரில்லீங்க...மகத்தான திறமைகள் கொண்ட மனிதர்.
பட்டிமன்றப் பேச்சாளர்.........என்ன ஒரு தப்பு பண்ணிட்டார்ன்னா நான்
அவர் ஊர்ல இருக்கற போது இந்த மாதிரி விழா எடுக்கல!!!!!!!
ஷைலஜா அக்கா,
பாராட்டுக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டதில் எனக்கு வருத்தமே.
ஜான் ஐயா,
மேலும் இதுபோல் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து
நடத்துவதற்க்கும் எனது வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி கண்டிபாக எல்லோருமே மகிழ்வாகதான் இருந்திருப்பார்கள்.
இங்கே பணியை சொல்லி இருப்பது,
விழா நடத்த இருக்கும் புதியவர்களுக்கு ஒரு அனுபவ பாடம்.
இன்னும் இந்த விமர்சனங்கள் மூலம், அவர் இன்னும்கூட பாடம் பெறலாம். இன்னும் அவருக்கு கிடைக்கும்
விமர்சனங்கள் மூலம் அவர் சிரமத்திற்கான பலன்கள்,
அதாவது நமது அன்பர்கள் சொல்லும் வாழ்த்தில் மகிழ்வார்.
யார் எது எழுதினாலும், தடுக்காமல் உற்சாக படுத்துங்கள்.
நல்லவற்றை எழுதும்போது தடுக்காதீர்கள் :-)
நன்றி திருமதி. தென்றலைத் தேடி அவர்களே.
வாசித்து, ஆராய்ந்து, "கருப்பொருளைக்" கண்டறிந்து பாராட்டும் உங்களின் நுண்மையைப் பாராட்டுகிறேன். உங்களைப் போன்ற வாசகர்களைப் பெற்ற எனது மனம் மகிழ்ந்து துடிக்கிறது.
It's really amazing to know you could organize such a wonderful programme for tamils in u.s.a.
Although more I was happy to learn that to state your originality. DO well. My hearty appreciation and wishes to you.
Fr. Francis Xavier,
Michaelpatty
Post a Comment