நான் கொண்டாடிய தீபாவளி
நான் தீபாவளி கொண்டாடி பத்து பதினைஞ்சு வருசமாச்சு... இவன் சமீபத்தில் மதம் மாறியவனாக இருப்பானோ என்று சந்தேகப்பட்டு விடாதீர்கள். வெளிநாட்டிற்கு வந்தபிறகு, தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விட்டது; அவ்வளவு தான். அதனால் படிச்ச பாடத்தையே திரும்ப ஒருமுறை படிப்பது மாதிரி, பழைய நினைவுகளையே ஒரு அரை அரைச்சுடலாம்னு தான் இந்தப் பதிவு.
சுற்றிலும் கிராமங்கள் சூழ்ந்த கிராமம் தான் எங்கள் கிராமம். வயக்காட்டு உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உழைப்பாளிகள் எம்மக்கள். ஒருவார தொடர் உழைப்புக்கான கூலியோடு, கூடுதலாக அஞ்சோ, பத்தோ வேலை செயதவர்கள் வீட்டில் கடனாக வாங்கிக்கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக ஆலங்குடியில் நடக்கும் தீபாவளி சிறப்புச் சந்தைக்கு மக்கள் சாரை சாரையாக செல்லும் பயணித்தில்தான் தீபாவளி கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும். எங்களது வயலில் வேலை செய்யும் பெண்கள், "வூட்டுக்குப் போயி தீபாவளிக்கு இட்லி அவிக்கனும்மா" என்று முடிந்த அளவு சத்தமாகச் சொல்லிவிட்டு சீக்கிரமே சென்றுவிடுவார்கள். பெரும்பாலான குடும்பங்களில் தீபாவளி சிறப்புப் பலகாரமே இட்லிதான்! இன்றும் அதே நிலைதான். நினைத்தால் மனம் கணக்கிறது. ஆனால் அவர்களின் கொண்டாட்ட உணர்வுக்கும், "முறைப்படி" தீபாவளி கொண்டாடாத எங்களைப் போன்றோர் மீது அவர்கள் வைத்திருந்த பாசத்திற்கும் குறைவே கிடையாது.
எங்கள் ஊரில் இருந்த கிறிஸ்தவ இளைஞர்களுக்கு, அக்கம் பக்கத்துக் கிராமங்களில் ஏகப்பட்ட இந்து வாலிபர்கள் நண்பர்களாக இருந்தார்கள். தினக்கூலிகளான அவர்களில் பலர், எப்பாடுபட்டாவது காசு சேர்த்து, ஆலங்குடி சென்று தீபாவளி இனிப்புப் பலகாரங்களை கடைகளில் விலைக்கு வாங்கிவந்து எங்களிடம் கொடுக்கும்போது அவர்களின் முகங்களில் ஓடிய மகிழ்ச்சி வெள்ளத்தை மரணத்தால் கூட வற்றிப் போய்விடச் செய்திட முடியாது. அன்புக்கும், நட்புக்கும், கொண்டாட்டத்துக்கும் அதுதான் இன்று வரை எனக்கு இலக்கணம்! மாரி மகன் கணேசன் தனது வீட்டில் செய்த 'சுளியன்' போன்ற பலகாரங்களைக் கொண்டுவந்து கொடுத்ததும், அதை ஜெபமாலை மகன் ஆரோக்கியசாமி உள்ளிட்ட மற்ற இனத்தவர்கள் மறுக்காமல் மனமகிழ்வோடு வாங்கி உண்டதும், கிராமங்களில் இன்னும் ஜாதிக்கொடுமை இருக்கிறது என்று பட்டிமன்றங்களில் வாதிடுபவர்களின் முகத்தில் பூசப்பட்ட கரி!
சுற்றுவட்டார மக்களெல்லாம் தீபாவளியன்று, புதுத்துணி உடுத்தி இங்கும் அங்குமாக சந்தோசமாக நடந்து திரியும் காட்சிகள், இது தீபாவளி நாள் என்பதை திசை எட்டுக்கும் தண்டோரா போட்டுக் கூறின. தீபாவளி இரவன்று எல்லாத் திசைகளிலிருந்தும் பட்டாசு சத்தம் கேட்கும். இரவென்பதால், மக்கள் அவ்வளவாக ஒன்று கூடுவதில்லை. தீபாவளி கொண்டாடுபவர்கள் மட்டுமன்றி, நாங்களும் தூக்கமே வராமல் தூங்கிக்கொண்டிருப்போம். விடிந்தும் விடியாமலும் எல்லோரும் கடைத்தெருவில் ஒன்று கூடிவிடுவோம். தீபாவளியின் சிறப்பு அம்சமே, கடைத் தெருவில் நடக்கும் சைக்கிள் போட்டிதான். செல்லத்துரை, சங்கிலி, சிதம்பரம் என்று பல சைக்கிள் பந்தய வீரர்களை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. இதில் சிதம்பரம் எங்கள் ஊர்க்காரர் என்பதால் நாங்களெல்லாம் அவரின் வெற்றிக்காக வேலை செய்தோம். சைக்கிள் போட்டி பிற்காலத்தில் கபடிப் போட்டியாக மாறிவிட்டது. சைக்கிள் போட்டி முடிந்தவுடன், பானை உடைத்தல் போட்டி மிக பரபரப்பாக இருக்கும். எங்களது பெற்றோர்களுக்குத் தெரிந்த நபர்கள், என்னைப்போன்ற சின்னப் பையன்களுக்கு பலகாரம் மற்றும் வெடி வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவர்.
பெட்டிக்கடை வைத்திருந்த ராவுத்தரின் மகன் ஷாஜஹான் எங்களது நண்பன். தீபாவளியின் போது அவனது தந்தையின் கடை அருகிலேயே கட்டிலில் வெடி விற்பான். நாங்கள் எல்லாம் அவனிடம் தான் வெடிவாங்குவோம். கேப்பு வெடி, சீனி வெடி, ஓலை வெடி, ராக்கெட், அனுகுண்டு, சங்கு சக்கரம், மத்தாப்பு என்று பலவகை உண்டு. சீனி வெடியும், ஓலை வெடியும் எங்களது செல்லப் பிள்ளைகள். யாராவது ஒருவன் வெடி வாங்கினாலே, அவன் பின்னால் ஒரு கூட்டமே திரண்டுவிடும். அந்தக் கூட்டத்துக்கு மத்தியில் வெடிவெடிக்கும் போது, வெடிவாங்கியவனுக்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். எனக்கு எப்படியோ முப்பது காசு கிடைத்துவிட்டது. ஏகச் சந்தோசம். இன்று வங்கியில் இருக்கும் (சும்மா ஒரு பேச்சுக்கு) முன்னூறாயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்காத ஒரு சந்தோசத்தை அன்று அந்த முப்பது காசுகள் எனக்குக் கொடுத்தன. அந்தச் சந்தோசத்தில் என் தந்தையின் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஷாஜஹான் கடை நோக்கி சிட்டாகப் பறந்தேன். அவனது கடைக்கு முன்பாக இருந்த, சற்று மேடுபள்ளமான இடத்தில் சைக்கிளை நிறுத்துவிட்டு, டேய்... முப்பது காசு கொண்டு வந்திருக்கேன்... வெடி குடுடா என்று பட்டைச் சாராயம் குடித்தவனைப்போல் சந்தோசமாக கத்திக்கொண்டு விரைகையில், டமாரென பெரும் சத்தம் கேட்டது. திருப்பிப் பார்த்தால், எனது சைக்கிள் கீழே விழுந்து அதன் கண்ணாடி, டைனமோ எல்லாம் உடைந்து கிடந்தது. அந்தத் தீபாவளி எனக்கு எப்படி முடிஞ்சிருக்கும்னு நான் இதுக்கு மேலே உங்ளுக்குச் சொல்லவேண்டியதில்லை... எதோ என் தந்தை என்னை உயிரோடு விட்டதே பெரிசு!
இன்று, திரும்பிப் பார்க்கிறேன்... தீபாவளி கொண்டாடாமலேயே என் நெஞ்சம் இனிக்கிறது. உங்கள் அனைவருக்கும், அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
10 comments:
நல்ல அனுபவக் கட்டுரை, நான் சிறுவயதில் தீபவாளி பண்டிகைக்கு லிஸ்ட் போட்டு பட்டாசு வாங்கியதும், எதிர்த்த வீட்டு வசதிப் படைத்த பையன் கொளுத்தும் பட்டாசை வேடிக்கை மட்டும் பார்த்ததும், காத்திருந்து டைலரிடம் சட்டை வாங்கியாந்ததும், பெரியவனாகி நாலு காசு சேர்த்து, கம்பெனி நடத்துகையில் என்னிடம் வேலை பார்த்தவர்களுக்கு தீபாவளி பணம் குடுக்க என் கஸ்டமர் ஆபீஸ் வாசலிலி கால் கடுக்க காத்திருந்ததும் நினைவுக்கு வருது.
ஜான், நீங்கள் என்னைக் கடந்த காலத்திற்கு இட்டுச் சென்று விட்டது. எல்லா மதங்களும் மனித நேயத்தை வலியுறுத்துகின்றன. அன்று
அண்ணன் தம்பிகளாய், அக்கா, தங்கைகளாய் ஒற்றுமையுடன் வாழ்ந்தோம். மாமன், மச்சன் உறவு கூறி மகிழ்ந்தோம். காலம் குணடைப்
போட்டுக் கசப்பை ஏற்படுத்திவிட்டதை
நினைத்த் வருந்த வேண்டிய நிலை. விழாக்கள் என்றாலே மக்கள் அனைவரும் கூடி மகிழ்வது.
நீங்கள் காட்டிய நினைவுகள் நம்மைத் தட்டி எழுப்பட்டும். எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். அடிமனத்தைத் தொட்டுவிட்ட வரிகள்
அமெரிகாவில் இந்துக்கள் கூட கிறுத்துமஸ் கொண்டாடுகிறார்கள்
இந்தியாவில் ஏன் கிறுத்துவர்கள் தீபாவளி கொண்டாடக்கூடாது?
வேந்தன் அரசு
தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.
வேந்தன் அய்யா அவர்களே,
இந்தியாவில் கிறுத்துவர்கள் தீபாவளி கொண்டாடக்கூடாது என்று நான்
சொல்லவில்லை; நாங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தீபாவளி கொண்டாடினோம் என்றுதான் பெருமையாகவும், சந்தோசமாகவும் எழுதியிருக்கிறேன். என் எழுத்தில் ஏதேனும் தவறு தெரிந்தால் தயவுசெய்து தெரிவுயுங்கள். நன்றி.
தவறு ஏதும் இல்லை ஜான்.
தீபாவளியின் பின்னணியில் உள்ள புராணம் என்னும் புருடாவை நம்பிவிடாமல் அதை விழவாக கருதி எவரும் கொண்டாடலாம் என்ற என் கருத்தை சொன்னேன்
வேந்தன் அரசு
ஜான்,
சுவையான அனுபவக் கட்டுரை!
நன்றி,
தாரா.
அருமை ஜான் பீட்டர். அருமையான பதிவு. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். சுழியன் எனக்குக் கூட மிகப்பிடித்த பலகாரம்.
அந்த வங்கியில் இருப்பது..... சரிசரி அது கிடக்கட்டும்...சைக்கிள் விவகாரம் எனக்கும் இதுபோல நடந்துள்ளது ஜான்.
மிக்க நன்றி.
அன்பு நண்பர் ஜான் பீட்டர் பெனடிக்ட் அவர்களுக்கு வணக்கம்!
கிராமத்துத் தீபாவளியை எங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்! அந்த நாட்களை அசைபோட்டுப் பார்க்க வைத்து அற்புதமான படைப்பாளியான நீங்கள், விரைவில் புதிதாக வெளிவரப்போகிற தமிழ் இணைய தளமான "அதிகாலை"க்கு உங்கள் படைப்புகளை, கருத்துக்களை மற்றும் பகிர்ந்து கொள்ள நினைப்பவைகளையும் கூட எழுதி அனுப்பலாமே! அனுப்பவேண்டிய முகவரி இதே மின்னஞ்சல் முகவரி அல்லது editor@adhikaalai.com நன்றி!
வாழ்த்துக்களுடன் - அதிகாலை நண்பர்கள்
அன்பு நிறை "அதிகாலை" நண்பர்களே,
ஆரம்ப நிலை எழுத்தாளனாகிய எனக்கு, உங்களின் வாழ்த்தும், பாராட்டும் மன மகிழ்வையும், உந்துதலையும் தருகிறது. என் எழுத்துக்களை கண்டிப்பாக "அதிகாலை"யுடன் பகிர்ந்துகொள்கிறேன். உங்களின் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்களும், பிரார்த்தனையும். நன்றி.
தீபாவளி வாழ்த்து அட்டை மிக பிரபலம்
Post a Comment