Sunday, November 11, 2007

அக்கா எனும்...


அன்னை அவளின் கவனமோ
அடுத்த பிள்ளை பெறுவதிலே
அக்கா அவளின் ஆர்வமோ
அன்புத் தம்பி தங்கை வளர்ப்பினிலே

மூத்தவளாய் அவள் பிறந்ததால்
முதுகிலே சுமப்பாள் இளையவனை(ளை)
மூக்கைப் பொத்திக் கொள்ளாமலே
மூத்தரம் மலம் அள்ளுவாள்

தான் உண்ணாவிட்டாலும்
தன் தம்பி தங்கை உண்ண வைப்பாள்
தான் படிக்காவிட்டாலும்
தன் தம்பி தங்கை படிக்க விளைவாள்

கல்யாணம் நடக்கும்வரை
கற்பினைக் காத்திடுவாள்
கணவன் கை பிடித்து
கரு சுமந்து தாயாவாள்

பட்டணத்தில் குடியேறி
பாங்காய்க் குடும்பம் நடத்திடுவாள்
படிக்கப் பட்டணம் வரும்
பாசத் தம்பிக்கு இடம் கொடுப்பாள்

படிக்கச் சென்ற தம்பி திரும்பி வர
பத்து மணியானாலும் பொறுத்திருப்பாள்
பாதை மீது பார்வை பதித்து
படபடப்பாய் காட்சி தருவாள்

தனக்கே போதாத சம்பளமெனினும்
தன் தம்பிக்கும் பகிர்ந்தளிப்பாள்
தவழ்ந்திடும் தன் பிள்ளைக்குத்
தாய் மாமனைக் காவல் வைப்பாள்

பட்டம் வாங்கிய தன் தம்பி
பணிக்குச் செல்வதைப் பார்த்து மகிழ்வாள்
பூரிக்கும் உள்ளத்தவளாய்
பூரி செய்து கொடுத்திடுவாள்

பணி நிமித்தம் தம்பி பாரின் செல்லும்போது
பாசத்துடன் அனுப்பி வைப்பாள்
பெண்ணொருத்தியை தம்பி மணக்கும்போது
பெரும் மன நிறைவு கண்டிடுவாள்

தன்னால் ஒரு குடும்பம் அமைந்ததென
தனக்குள்ளே பெருமை கொள்வாள்
தம்பி போல் தன் பிள்ளைகள் வளர
தவமாய்த் தவம் கிடப்பாள்

அத்தனையும் அன்னை செய்திட்டால்
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
அடுத்தவனை மணமுடித்துச் சென்றிட்ட
அக்கா செய்திட்டதனால்
அவளையே தெய்வம் என்றிடுவேன்

17 comments:

kalyanakamala said...

அக்கா தம்பி உறவு எப்படிப்பட்டது என்று தம்பி இல்லதவர்களுக்கும்,அக்கா இல்லாதவர்களுக்கும் உணர்த்தும்படி சொல்லி இருக்கிறீர்கள். இந்த உறவு ஒரு சின்ன போட்டி மனப்பன்மையில் உயிரிழப்பதும் உண்மைதானே?அந்த அக்காவும் தம்பி மனைவியை தன் தங்கையைப்போல் நினைப்பதில்லை.தம்பி மனைவியும் அக்காவை தன் அக்காவைப்போல் நினைக்க முடிவதில்லை. நினைத்து விட்டால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

Anonymous said...

கவிதைகள் மனதைக் கவர்கின்ற்ன.உணர்ச்சிப் பெருக்கான கவிதை.பாராட்டுக்கள்

அன்புடன்
நந்திதா

Anonymous said...

ஜான் பீட்டர்,

நீங்கள்தான் மனிதனய்யா.

க. அடைக்கலம்

Anonymous said...

நல்ல முயற்சி.

ஆனால் சில இடங்களில் வார்த்தைகள் நெருடுகின்றன

உ.ம்.:
பூரிக்கும் உள்ளத்தவளாய்
பூரி செய்து கொடுத்திடுவாள்

பணி நிமித்தம் தம்பி பாரின் செல்லும்போது
பாசத்துடன் அனுப்பி வைப்பாள்

மாற்றி எழுதியிருக்கலாம்.

Anonymous said...

முதல் 4 வரி ஏற்று கொள்ள முடியவில்லை... அக்காவை உயர்த்த அன்னையை தாழ்த்திய
மாதிரி தோன்றுகிறது...

மற்றபடி அருமை

Anonymous said...

> அத்தனையும் அன்னை செய்திட்டால்
> அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
> அடுத்தவனை மணமுடித்துச் சென்றிட்ட
> அக்கா செய்திட்டதனால்
> அவளையே தெய்வம் என்றிடுவேன்

ஒரே மாதிரி சேவை என்றால் தாயின் சேவையை விட தமக்கையின் சேவை மிக உயர்ந்ததே

நல்லா இருக்குங்க ஜான்

Anonymous said...

ஜான் பீட்டர்....மிகச்சிறந்த கவிதை, வித்தியாசமான பார்வை .... (வித்தியாசமென்று நான் குறிப்பிட்டது...பல எழுத்தாளர்களின் எண்ண ஓட்டத்தில் எழாத கவிதைப்பாத்திரங்கள் இவை)..இது போன்று யாரும் அதிகம் தொடாத கவிதைக்குரிய, போற்றுதலுக்குரிய கதாபாத்திரங்கள், கவிதைக்கருக்கள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளைப் பற்றி இனி கவிதை, கதை, கட்டுரை போன்றவைகளை எழுதலாமே! அதனை நீங்கள் செய்ததனால்தான் நான் அங்ஙனம் குறிப்பிட்டேன். வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! வானம் என்ன...... வாழ்க்கையே வசப்படும்.... நம்மிடம்......வாழ்த்துக்களுடன் நவின்.

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
http://manuneedhi.blogspot.com

Anonymous said...

தங்களது மிக அருமையான உணர்ச்சிவசமூட்டும் கவிதையைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே வெகு வருடங்களுக்குமுன் வானெய்திட்ட எனது அக்கா அவர்களின் நினைப்புவந்து கண்ணீர் பெருகலாயிற்று. மிக மிக அற்புதமான கவிதை!

Anonymous said...

ஆமா..கவிதை நல்லா இருக்கு..

தேகி

Anonymous said...

தமக்கையின் அன்பிற்கு அளவே இல்லை. அக்கா எப்பொழுதுமே தன்னலம் பாராது தம் சகோதர
சகோதரிகளை நல்வழிப்படுத்தி வாழ்க்கையில் உயர்த்தி நலம் காண்பார்..
--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

Agathiyan John Benedict said...

பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
திரு. மஞ்சூரார் மற்றும் வி. ரமேஷ் ஆகியோரது கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

Agathiyan John Benedict said...

உளம் மகிழும் பாராட்டுக்களை என் எழுத்துக்கு ஊக்கத் தொகையாக அளித்திட்ட மரத்தடி மறத்தமிழ் நெஞ்சங்கள் நவநீத கிருஷ்ணன், க. அடைக்கலம், வெங்கட்ராம் சீனிவாஸ், நந்திதா காப்பியன், டேவிட் சகாயராஜ், தொலைபேசி மூலம் வாழ்த்திட்ட நண்பர் கோபிநாத் போன்றோர்கள் மற்றும் பதிலிடாவிட்டாலும் என் எழுத்துக்களைப் படித்துப் பார்த்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

கவிதை என்றாலே அது பெரும்பாலும் காதலைப் பற்றியதாகத்தான் இருக்கிறது; தவறில்லை. இதில் சற்று மாறுபட்ட எண்ணத்தோடு, எதாவது ஒரு "கருத்தை" மையமாக வைத்து, "கடந்த காலத்தை" கண் முன் நிறுத்தி, கவிதை (போல்) சில எழுதி வருகிறேன். இதனைக் கண்டறிந்து குறிப்பிட்டுப் பாராட்டிய நவ நீத கிருஷ்ணன் போன்ற நண்பர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.

Anonymous said...

தங்களின் எழுத்து அருமை. பெண்மையின் பெருமையை உணர்த்தி தெய்வமாக போற்றியிருக்கும் அனுபவக் கவிதைக்கு பாராட்டுக்கள். மற்ற படைப்புகளும் படித்தேன், அனைத்தும் அருமை. பெண் பெருமை போற்றும் உங்களைக் கண்ட தங்கள் குடும்பத்தார் மிகவும் குடுத்து வைத்தவர்கள்.

Anonymous said...

sirumailyulum perumaiyanai katpannai, valthuggkal (murthy sinnathu kirthy perusu pola)

tks/mariamah

Anonymous said...

எங்க சார் இருந்தீங்க... இவ்வளவு நாளா??? இவ்வளவு அருமையான கவிதையை எழுதுற ஆளு..

நான் விரும்பும் கவிதை எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும்.
01. கவிதைக் கரு நமது அன்றாட வாழ்க்கையைப் பற்றியதாய் அல்லது சிக்கலில்லாததாய் இருக்க வேண்டும்.
02. சொல்லப்படும் விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவாய் இருத்தல் வேண்டும்.
03. எழுதப் பட்ட கவிதையை புரிந்து கொள்ள முன், பின் நடு நவீனத்துவ அறிவெல்லாம் தேவைப் படக் கூடாது.
04. படித்த பின்பு படிப்பவருக்கு அவரது வாழ்க்கையின் ஏதாவது �'ரு பகுதியை பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும்.

இந்த எல்லாத் தகுதியும் உங்கள் அக்கா எனும்.. என்ற கவிதைக்கு சரியாய் பொருந்துகிறது. நல்ல கவிதை. இதைப் படிக்கும்போது எனது வாழ்க்கையை நானே திரும்பிப் பார்ப்பதுபோல் உள்ளது. எனது அக்காவும் இதேபோலத்தான். என்ன.. அக்கா பொன்னு ரொம்ப சின்னவளா போயிட்டதால நான் தூக்கி வளக்கவேண்டியதா போச்சி...

வாழ்த்துக்கள் ஜான்..

ஜெயக்குமார்

Anonymous said...

ஜான் அவர்களுக்குஉங்கள் எழுதுகோல் யாராவது நன்றிப் பரிசாக வந்ததுவோ.“அக்கா எனும் “ கவிதையில் பாசத்தால் அவள் செய்த தியாகத்துக்குஓர் நன்றி மடல். கொடுத்தவனுக்கு நன்றி கூறும் உங்களுக்குத் தமிழ் நன்றிகூறும். அழகு வார்த்தைகளில் கவிதை படைப்பதைவிட அர்த்தமுள்ள காட்சிகளுக்கு அவள் வடிவமானாள்
உம் கவிதை தமிழுக்கு ஓர் பாமாலை.கவிதைக் கருவிற்கும், நன்றிக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதைக்கும்என் மனப்பூர்வமான பாராட்டுதல்கள்

சீதாலட்சுமி

Anonymous said...

அன்பருக்கு வணக்கம்.
தங்களின் 'அக்கா என்னும்' கவிதையைப் படித்தேன்.
நன்று! தங்களுக்கு சந்தக்கவிதை நன்றாக வருவதற்கான வாய்ப்புள்ளது
ஏதேனும் ஓர்சந்தத்தைப்பிடித்து
எழுதிப்பாருங்கள்.
பொருட்செறிவும் சொல்வளமும் மெருகேறும்!
வாழ்த்துகள்