Thursday, December 6, 2007

முதல்வர் ஸ்டாலின்? தீர்ப்புச் சொல்லுமா திமுக மாநாடு?

குறிப்பு: இந்தக் கட்டுரை திண்ணை இதழில் பிரசுரமாகியுள்ளது.

திரு. மு. ருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள் ஸ்டாலினுக்கு முழு ஆதரவு இருப்பதுபோல் தெரிந்தாலும், கருணாநிதியின் குடும்பத்துக்குள் இந்தப் பிரச்சினை இன்னும் 'நீருபூத்த நெருப்பாகவே' இருப்பது அரசியல் தெரிந்தவர்கள் அறிந்ததுதான். திமுக தலைவரின் குடும்பப் பிரச்சினை, உச்ச கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் 'அழகிரி நாட்டின்' ஒரு பகுதியான திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது.


விஜயகாந்த், சரத்குமார் போன்ற சினிமா நட்சத்திரங்கள் ஆரம்பித்த புதிய கட்சிகளை நோக்கி இளைஞர்கள் செல்வதைத் தடுப்பதற்காகவும், தமிழக இளைஞர்கள் திமுக-வின் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவுமே இந்த மாநாடு என்று உதட்டளவில் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த திமுக-வும் தனது பக்கமே இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே திரு. ஸ்டாலினால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.

உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும், இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழகிரியின் ஆதிக்கம் பரவிக் கிடக்கும் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் தினம் தினம் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் 'அனா' அழகிரியோ இன்றுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? இதோ எனது சில ஊகங்கள்:
- வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக முழங்குவார்கள்
- 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகச்' சொல்லி, இளைஞரணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகுவார்
- சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதாகத் தெரிந்தால், திமுக-வின் அடுத்த தலைவராக திரு. ஸ்டாலினை கலைஞர் அறிவிப்பார்
- 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும்' அதே காரணத்தைச் சொல்லி, முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என கலைஞர் அறிவிப்பார்
- குறைந்த பட்சம் 'துணை முதல்வர்' பதவி ஸ்டாலினுக்கு வழங்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நடத்துவதால், இந்த மாநாடு வெற்றி பெறுவதில் எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால் தனது தந்தை தலைவராக இருக்கும் திமுக-வில் தனக்கும் "பங்கு" உண்டு என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி. ஒன்றை அடைவதற்காக, 'எதையும்' செய்யத் தயாராக இருக்கும் தனது சகோதரர் திரு. அழகிரியை சமாளித்து கட்சியையும், ஆட்சியையும் ஸ்டாலின் தனதாக்கிக் கொள்வாரா? முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறது உலகத் தமிழினம்!

7 comments:

Anonymous said...

யாரு முதலமைச்சரா இருந்தா உங்களுக்கென்ன சாமி? நீங்க என்ன வாஷிங்டன்ல இருந்து இங்க வந்து ஸ்டாலினுக்கு ஓட்டா போடப்போறீங்க.

Agathiyan John Benedict said...

வணக்கம் அனானியாரே.

இப்படிச் சொல்லிப்புட்டா எப்புடி? நான் வாசிங்டனில் இருந்தாலும்கூட, தாய்நாட்டு நடப்பை கவனித்து, கணிப்பது உங்களுக்கு சரியெனப் படவில்லையா?

Anonymous said...

திருநெல்வேலியில் நடக்கும் மாநாடு பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது.இதில் அதிகார மாற்றம் நடக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அழகிரி அரசியல்பொறுப்பில் வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படித்தான் கனிமொழிபற்றியும் கருணாநிதி கூறினார். பின்பு கனிமொழிஎம்பி ஆனார். இந்த மாநாட்டில் கனிமொழி அமைச்சராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் வரமுன்மொழியப்படுவார்கள் எனத் தெரிகிறது. திருநெல்வேலியின் அரசு அலுவலங்கள்இம்மாநாட்டின்பணியையே அதிகம் செய்கின்றன என்கிற தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அரசுஎன்றில்லை,எந்த அரசும்அரசு அலுவலகங்களை இப்படித்தான் பயன்படுத்தியிருக்கின்றன. திருநெல்வேலி மாநாடு என்ன செய்கிறது என்று பார்க்கலாம். இந்த வாய்ப்பிலும் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி பற்றிய அறிவிப்புகிடைக்கவில்லையென்றால்,ஸ்டாலின் பாவம்தான்!!!

--பிரசன்னா

Ravikumar Veerasamy said...

பத்திரிகை செய்தியை விரிவாக படித்து சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள். நாடு விட்டு வந்தாலும் தாய் மண்ணில் என்ன நடக்குது என்ற ஆர்வம் பாராட்டுக்குரியது. இருந்தாலும், கழகங்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மாநாடு நடத்தி தங்கள் சக்தியை காண்பிக்கும் யுக்தியை பயன்படுத்த போகிறார்கள்? இதை நாம் ஒரு நடப்பாக கணிப்பதை/கண்காணிப்பதை காட்டிலும் இந்த நிலை மாற என்ன வழி என்று சிந்திக்க வேண்டும், மற்றவர்களை சிந்திக்க செய்ய வேண்டும். இதைப் பற்றி இங்கு சொல்ல நேரமில்லை, எனது blog-ல் கட்டுரையாக விரைவில்.

Agathiyan John Benedict said...

நன்றி திரு. ரவிக்குமார். இரண்டு விஷயங்கள். இப்படிப்பட்ட மாநாடுகளே நடத்தக்கூடாது என்பது ஒன்று. அதையும் மீறி நடக்கும் இந்த மாநாட்டில் என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்பது மற்றொன்று. அந்த இரண்டாவதைத் தான் நான் எழுதியிருக்கிறேன். முதலாவதில் எனக்கும் சம்மதமே.

Anonymous said...

இதுபோல் ஆட்கள் கலந்துகொள்ளும் மாநாடுகள் இன்னும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளில் காணாமல் போய்விடும். அனைவருக்கும் பரவலான வேலைவாய்ப்புகள் இருந்தால் வறுமை ஒழிந்தால் நம் அரசியல் கலாச்சாரம் ஒழிந்து ஆரோக்கியமான அரசியல் வரலாம்.

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்
www.rishiraveendran.com
www.rishiraveendran.tk

Anonymous said...

You dont have voting right as long as you stay in US then why do you bother who is going to become CM or PM. If you are really interested in people's welfare you should come back to India and contest in election.

The real situation in India is: Our politicians have created a situation where constructive plans will not fetch any votes but "freebies" will fetch you votes. Unfortunately you are one of the supporters of Freebies.