Monday, March 17, 2008

வயல் கூலி


காலையில எழுந்திருச்சு
கடைத் தெருவில் கண் விழிச்சு
அம்பது காசுக்கு காபி வாங்கி
அடி வயித்தை நனைச்சுக்கிட்டு

கலப்பையை தூக்கிக்கிட்டு
காளைகளை ஓட்டிக்கிட்டு-கூலிக்கு
கரிசல் காட்டை உழுதுவிட்டு
களைப்போடு திரும்பி வந்து

கல்லுகளைப் பொறுக்கிவிட்டு
கால் படி ரேசன் அரிசி போட்டு
கலகலன்னு கொதிக்கவிட்டு
கலயத்துல ஆறவிட்டு
கால் வயித்துக்கு குடிச்சுப்புட்டு

கிழிஞ்ச துண்டை தலைக்கு வச்சு
குட்டித் தூக்கம் போடும் நேரம்
கெட்ட செய்தி காதில் விழும்
கெட்ட கோபம் மூக்கில் வரும்

"அரசியல்வாதி அதிகாரி
அநியாயமா கூட்டு சேந்து
ஆதாயம் பாக்கிறாங்க - ரூ. 2 ரேசன்
அரிசியைக் கடத்திச் சென்று"

நாறு நாறா கிழிச்சுப்போட
நடிகரல்ல நாங்க யாரும்
நாதியத்த ஜென்மம் நாங்க
நாவால தான் கிழிக்க முடியும்

ஏழை எங்களை வயித்திலடிக்கும்
எல்லோர் வயித்திலும் புத்து வைக்கும்
கொள்ளை லாபம் கூட வராது-அவங்க
கொள்ளையில போர போது!

1 comment:

Anonymous said...

கொத்தமங்கலம் சுப்பு நினைவில் வந்தார்! நல்ல கவிதை!