Monday, April 14, 2008

மிஸ் யுனிவர்ஸ்


சிரித்த முகம் இவளுக்கு
சிவந்த நிறம் இதழுக்கு
மதம் இல்லை அவளுக்கு
மணம் உண்டு கூந்தலுக்கு

சிரித்திடும் ஒலியினில்
சில்லறைகள் சிதறியோடும்
சிலிர்த்திடும் பேச்சினில்
செவிட்டுக் காதிலும் தேன்பாயும்

அண்டம் முழுதும் ரசிகர்களை
ஆட்டிப் படைக்கும்
அளப்பரிய ஆற்றலை
அக்குகளுக்குள் மறைத்தவள்

ஆசியாவில் பிறந்தவளுக்கு
ஆப்பிரிக்காவிலும் ரசிகர் மன்றம்
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை
அவள் பெயரில் இணையதளம்

அவள் பெயரில் விழா எடுத்தால்
ஆட்கள் பல்லாயிரத்தை
அரங்கத்தில் குவிக்கும்
அதீத சக்தி பெற்றவள்

நான் நீ என்று
நங்கையர்கள் போட்டி போட்டு
நடனமாடத் தூண்டும்
நற்பெயரைப் பெற்றவள்

அரைப் பாவாடை கட்டினாலும்
அரைச் சீலை உடுத்தினாலும்
திரைச் சீலை விலகும்போது
திசைகள் எட்டும் எதிரொலிக்கும்

அவள் பிறந்த நாளன்று
ஆலயங்களில் கூட்டம் அலைமோதும்
அர்ச்சனைத் தட்டு வாங்கி வாங்கி
அசந்து போவாரு கோயில் பூசாரி

வயசுல இவள் கிழவி
வசீகரத் துலஇளங் குமரி
உலகத் தமிழர் செய்தியிலே
உய்யாரமாய் இடம் பிடிப்பாள்

மிஸ் யினிவர்ஸ் பட்டம்
மிடுக்கான பொருத்த மிவளுக்கு
செம்மொழிப் பட்டம் வென்ற
சீர் மிகுசெந் தமிழுக்கு

சித்திரையில் முத்திரைகள் பதித்து
தை முதலுக்குக் கை நழுவும் கன்னியே
இறுதியாய் உனக்கு ஏப்ரலில்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே!

நன்றி:
தமிழ் சிஃபி

2 comments:

Anonymous said...

excellent piece

Unknown said...

Thanks for sharing a very good kavithai about Miss Universe.It's a wonderful kavithai.Keep it up John.