Monday, March 16, 2009

பாட்டி நர்ஸ்

இடுப்பு வலி யெடுத்த
எங்க ஊரு பொம்பளையளுக்கு
எத்தனையோ பிரசவங்களை
இலவசமா பார்த்த பாட்டி

பாட்டின்னா பாட்டி
அப்படியொரு பாட்டி
உயிரோடு புள்ளையளை
உருவி எறியும் 'மொட்டையம்பட்டி' பாட்டி

காது கொஞ்சம் கேட்காத பாட்டி
காசு பணம் வாங்காத பாட்டி
கஞ்சி கொஞ்சம் ஊத்துனா
காலை நீட்டி குடிச்ச பாட்டி

காரியக்காரர் பொஞ்சாதிக்கு
கவனமா பிரசவம் பார்த்து
கருப்பு நிற குழந்தை என்னை
கண்டாங்கியில் கிடத்திய பாட்டி

வயிற்றுப் பசிபோக்க என் இல்லம் நீ
வந்தபோதெல்லாம் உனைக் கொடிய
வார்த்தைகளால் தூற்றிய என் இளம்
வயதை நினைத்து வருந்துகிறேன் பாட்டி

அறியாமல் நான் செய்த
அக்கிரமம் பொறுத்துக்கோ பாட்டி
அடுத்த தலைமுறைக்கு முதியோரின்
அருமைதனை எடுத்துரைப்பேன் பாட்டி

காலில் விழுந்து மன்னிப்புகேட்க
காலம் உனை விட்டு வைக்கலையே பாட்டி
காலப் பேராழியில் இந்தக்
கவிதை உனக்கு அர்ப்பணம் பாட்டி

குறிப்பு: சமீபத்தில் எனக்கொரு மகள் பிறந்தாள்

No comments: