தேம்பாவணி - சிற்றுரை
வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான தேம்பாவணிபற்றி நான் ஆற்றிய சிற்றுரை.
என் இதயத்துக்குள் புதைந்து கிடக்கும் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால அனுபவங்களையும் கவிதை, கட்டுரை, ஒலி, ஒளி வடிவில் நான் இறைத்துப் போட்டிருக்கும் வேலியில்லா களத்து மேடு. Disclaimer: நான் கவியரசோ, கவிப்பேரரசோ அல்ல; கவிதைச் சோதனையில் களமிறங்கியிருக்கும் 'கத்துக்குட்டி'. கற்றுவிட்டு கவிதை எழுத வரவில்லை; மாறாக, கவிதை எழுதிக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்... கவனம் தேவை!
வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான தேம்பாவணிபற்றி நான் ஆற்றிய சிற்றுரை.
Posted by
Agathiyan John Benedict
at
9:45 PM
0
comments
Labels: அனுபவம், இணைய வீடியோ, கிறிஸ்தவம், தமிழ்ச் சங்கம்


செப்டம்பர் 25-ம் நாள் வியாழக்கிழமை மாலை, மாண்புமிகு பாரதப் பிரதமர் முனைவர். மன்மோகன்சிங் அவர்கள் அமெரிக்க அதிபர் திரு. ஜார்ஜ் புஷ் அவர்களை வாசிங்டனில் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். அதேசமயம் வட அமெரிக்க இந்தியக் கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு FIACONA சார்பாக, வெள்ளை மாளிகையின் வடக்கு வாயிலில் அமைதிப் பேரணியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது. இந்தியாவின் ஒரிஸ்ஸா, கர்நாடகம் மற்ற சில மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறையைத் தடுத்து நிறுத்திட, பிரதமர் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதே பேரணியில் கலந்துகொண்டவர்களின் நியாயமான கோரிக்கையாக இருந்தது. தொடர் மழையையும், வீசியடித்த குளிர் காற்றையும் பொருட்படுத்தாது, பல தேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். மேலும் உள்ளூர் பத்திரிக்கையாளர்களும் இந்தப் பேரணியைச் செய்தியாக்கிக் கொண்டதால், தங்களின் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தார் பேரணி அமைப்பாளர் திரு. ஜோ குரூஸ் அவர்கள்.
Posted by
Agathiyan John Benedict
at
11:17 AM
2
comments
Labels: கட்டுரை, கிறிஸ்தவம்
இந்தியத் துணைக்கண்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் வாசிங்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட வேளாங்கன்னி மாதா திருவிழாவில் நான் பாடிய மாதா பாடல் இது.
எச்சரிக்கை: சும்மா என் நினைவுக்காகவே இதை வலைப்பதிவில் இணைத்துள்ளேன். வாசகர்களின் நேரத்தை வீணாக்குவது எனது நோக்கமல்ல! நன்றி.
Posted by
Agathiyan John Benedict
at
3:37 PM
2
comments
Labels: அனுபவம், இணைய வீடியோ, கிறிஸ்தவம்
என் இனிய தோழர்களே,
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம். தமிழன் என்று சொல்வதில் எப்படி தலை நிமிர்ந்து நிற்கின்றேனோ அதுபோல கிறிஸ்தவன் என்று சொல்வதிலும் மாபெருமை கொள்கிறேன். அன்னைத் தமிழ் என்னை அரவணைத்து மகிழ்வதைப் போலவே, என்னைப் பெற்றெடுத்த மதமும், கல்வி முதற்கொண்டு எனக்குத் தேவையான எத்தனையோ அடிப்படை உரிமைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும், நீதிபோதனைகளையும் அள்ளியும், சொல்லியும் தந்திருக்கிறது. அதற்காய் என் முன்னோர்களைத் தலை வணங்குகிறேன்.
கிறிஸ்தவர்கள் மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் விரோதமானவர்கள் என சிலர் எண்ணுவதாக அறிகிறேன். மொழி மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், சினிமா போன்ற ஊடகங்களைப் பார்ப்பதையும், பொட்டு மற்றும் பூ அணிவதையும் பாவமான செயலாக கிறிஸ்தவர்கள் நினைப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுபற்றி என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கமாக ஒரு விளக்கமளிக்க விழைகிறேன்.
கிறிஸ்தவ மதம் என்று சொல்லும்போது அதிலே பல நூறு பிரிவுகள் இருக்கின்றன. நான் வாடிகன் நகரில் இருந்து செயல்படும் போப்பாண்டவரின் தலைமையில் இயங்கும் 'ரோமன் கத்தோலிக்க' பிரிவைச் சார்ந்தவன். சட்ட திட்டங்களும், கட்டுக்கோப்பும் அதேசமயம் தாராள மதச்சித்தாந்தங்களும் (Religious Liberalism) கொண்ட அமைப்பாகவே நான் இதை அறிகிறேன். என் மூதாதையர்கள் எந்தக் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள் என்பது தெரியாது. புனித தோமையார் இந்தியாவுக்கு வந்தபோதே மதம் மாறியவர்கள் இவர்கள் எனவும் சொல்லப்படுகிறது. என் உறவினர்களில் கிறிஸ்தவர் அல்லாதவர் ஒருவர்கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எமது உறவினர்கள் வாழும் ஊர்கள் யாவுமே கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்பவையாகவே இருக்கின்றன. எனது ஊரின் பெயரே மெக்கேல்பட்டி என்பதுதான். அந்த அளவுக்கு ஆழ வேரூன்றியிருக்கிறது எமது கிறிஸ்தவப் பயணம்.
இந்தப் பயணத்தில், மொழியையும் கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுமாறு எந்தச் சூழ்நிலையிலும் என் மதம் என்னை அறிவுறுத்தியதில்லை. எம்மவர் யாரும் அப்படி நடந்துகொண்டதும் இல்லை. மாறாக மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறோம். அதனால் தான் திருமணத்தின்போது மணமகள் ஒரு முழுத் தமிழ்ப் பெண்ணாகவே பட்டுச்சேலையும், பொட்டும், பூவும் அணிந்துகொள்கிறாள். தமிழ்த் திருமணங்களைப் போலவே, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதும், மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு. வாசிங்டன் வட்டாரத்தில் வசிக்கும் எண்ணற்ற கிறிஸ்தவர்கள், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் கட்டணம் செலுத்திய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்த ஒரிரு பாதிரியார்களும் அடக்கம்.
நான் சிறுபான்மையினனாக இருப்பதால், எந்த விசயத்திலாவது இந்தியாவுக்கு எதிராக என்றாவது நான் நினைத்ததுண்டா? என்று என்னுடன் பணியாற்றிய ஒரு தெலுங்கு நண்பர் ஒருமுறை வினவினார். ஆண்டவனை வழிபடுவதைப் போலவே, அன்னை பாரத மாதாவையும் இன்று வரை வணங்கிவருகிறேன் என்று பதிலளித்தேன். சில மேடைகளிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் நான் "மருதமலை மாமணியே முருகைய்யா..." என்ற பாடலைப் பாடியதுண்டு. நீங்கள் கிறிஸ்தவர் ஆயிற்றே, ஆனாலும் மருதமலை முருகனைப்பற்றி பொதுமேடையில் பாடினீர்களே என்று ஒருவர் ஆச்சரியப் பாராட்டு தெரிவித்தார். "நான் கிறிஸ்தவன் என்பது எப்படி உண்மையோ அதுபோல தமிழன் என்பதும் உண்மையே. முருகன் தமிழ்க் கடவுள். அவன் புகழ் பாடும்போது, என் தமிழுணர்வு பொங்கிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தத் தமிழ்க் கடவுள் மீது இருக்கும் பற்றினால், 2005-ல் நான் இந்தியா சென்றபோது, சற்றும் எனக்குச் சம்பந்தமே இல்லாத திருச்செந்தூருக்குச் சென்று வந்தேன்" என்று நான் விளக்கமளித்தபோது அவர் வியந்துபோனார். ஆம் நண்பர்களே, கூரிய கோடாரி கொண்டு என் நெஞ்சாங்கூட்டைக் கொத்திக் கிளறினால், அங்கே கொப்பளித்து சீறிட்டுப் பாய்ந்து வழியும் என் குருதி கூட, 'அன்னைத் தமிழ் வாழ்க' என்று உரக்கக் கூவிக்கொண்டே உறை நிலையை எய்தும். சாவதற்குள் தமிழுக்காக ஏதாவது செய்துவிட்டுத்தான் சாகவேண்டும் என்ற வேட்கை, இரும்புத் தாதுவை விட இன்னும் இறுக்கமாகவே என் உள்மனதில் குடிகொண்டிருக்கிறது.
மதத்திற்காக மொழியையும், கலாச்சாரத்தையும் விலக்கி வைக்கும் வெகுசிலர் இருப்பதை நான் அறிவேன். ஆண்டவனை வழிபடும்போது கூட, நமக்குத் தெரிந்த மொழியில் இருந்தால்தான், ஆண்டவனோடு உள்ளத்தால் ஒன்றிணைய முடியும் என்பதால்தான், தமிழ் உட்பட எத்தனையோ மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் லத்தீன் மொழியில்தான் எல்லா ஜெபமும் இருந்திருக்கும். இதுதான் கிறிஸ்தவ மதம் தாய்மொழிக்கு அளித்திருக்கும் சிறப்பு. மதத்துக்காக மொழியை இழந்துவிடாதீர்கள் என்றுதானே இதற்குப் பொருள்? அதுபோலத்தான் கலாச்சாரமும். இதை 'அவர்கள்' புரிந்துகொண்டால் சரி.
மனித வாழ்வு நிலையற்றது என்பதை நன்கறிவேன். அதற்குச் சிறந்த உதாரணம், 'தேன்கூடு' இணையதளதின் தூணாகச் செயல்பட்டுத் தமிழ்ப் பணியாற்றி இளம் வயதிலேயே சாவைத் தழுவிய திரு. சாகரன் (எ) கல்யாண் அவர்கள், சாத்தான்குளம் திரு. அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் திரு. ஆசிப் மீரான் அவர்களின் மனைவி திருமதி. ஜாஸ்மீன் என்று பலரைக் கூறலாம். என்னுடைய நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் என் பெற்றோர், உற்றாருக்குக்கூடத் தெரியாது. அதனாலே எழுதி வைத்திட முடிவெடுத்தேன்.
உங்களிடம் நான் வேண்டுவது இதுதான்: வெகுசிலர் இப்படி இருக்கிறார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் என்று கருதிவிடாதீர்கள். கிறிஸ்தவராக இருந்தும், தமிழுக்குப் பணியாற்றிய பலர் இருப்பதை அறியுங்கள். தஞ்சை மன்னன் சரபோஜியின் அரசவைக் கவிஞராக இருந்த வேதநாயகம் சாஸ்திரியார், திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவர் என்று தமிழுக்குப் பணியாற்றிய கிறிஸ்தவர்களின் பட்டியல் நீள்கிறது. வெரும் தமிழ் உணர்வாளனாக மட்டும் இல்லாமல், ஒரு தமிழ்க் கலைஞனாகவும் நான் இருக்கிறேன் என்பதையும் இங்ஙனம் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன தோழரே, எம்மையும் உம்மில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீரா? உம் தோளோடு தோள் நின்று தமிழ்ப் பணியாற்றும் வாய்ப்பினை எமக்கு நல்குவீரா? நன்றி.
Posted by
Agathiyan John Benedict
at
10:26 PM
18
comments
Labels: கட்டுரை, கிறிஸ்தவம்