கேளுங்கள் தரப்படும்
If you have a good question, please write it in the 'comments'. I will answer you.
கேள்வி: டாக்டர். அப்துல் கலாம் கூறுவது போல், 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகிவிடுமா?
பதில்: அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் எத்தனையோ கோடி மக்களின் எரிகிற வயிற்றிலே எண்ணெயை ஊற்றும் விதமாக, "இந்தியா ஒளிர்கிறது" என்று 2004-பொதுத் தேர்தலின் போது அப்போதைய ஆளுங்கட்சியான தே.ஜ.கூ. விளம்பரம் செய்ததால், யாருமே எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவியது. கையில் கம்ப்யூட்டருடன் வலம் வருவதையே பெருமையாகக் கருதிக் கொண்டு, கலப்பையை மட்டுமே நம்பி வாழும் விவசாயியின் வேதனையைக் கிளறியதால், ஆட்சியை இழந்தார் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. அப்படி இழக்க ஏதும் இல்லை என்பதால், நம்பிக்கையுடன் டாக்டர். அப்துல் கலாம் காணும் கனவு தான் இது. நம்பிக்கை என்னும் அச்சாணியை வைத்துத் தானே வாழ்க்கை என்னும் சக்கரம் சுழல்கிறது? ஆனால் அந்த நம்பிக்கை நிறைவேறுவதற்கான அடித்தளம் இன்னும் அமைக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.
கேள்வி: இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிகரமாக தோற்றது ஏன்?
பதில்: வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகன்றோ? இரு அணிகள் மோதும்போது, ஒரு அணி தோற்பது இயல்பு தானே? சூதாட்டம், மேட்ச் பிக்சிங், சொந்த லாபம், பிரபல நிறுவங்களின் பல கோடி மதிப்பிலான முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமை, அதற்கும் பலபடி மேலே போய், பயிற்சியாளர் கொலை என்று எத்தனையோ திரைமறைவுக் காட்சிகளை உள்ளடக்கியதுதான் கிரிக்கெட் விளையாட்டு. ஆனால் இதையெல்லாம் அறியாமல், கிரிக்கெட் பைத்தியமாக அலையும் அன்பர்களை நினைத்தால் மனசுக்கு வேதனையாக இருக்கிறது.
கேள்வி: தமிழக அரசின் "இலவசங்கள்"பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இலவசங்களைக் குறை கூறுபவர்கள் எல்லோருமே இலவசங்களைப் பெறுவதற்கான தகுதியற்றவர்கள்தான். அதாவது பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள்தான். பசியின் கொடுமையை பாடம் நடத்தி புரியவைக்க முடியாது. "இலவச" அறிவுப்புகளும், ரூ. 2/-க்கு ஒரு கிலோ அரிசி என்பதும் தேர்தல் வெற்றிக்காகக் கையாளப்பட்ட அரசியல் யுத்திதான் என்றாலும் கூட, உண்மையிலேயே ஏழைகளைச் சென்றடையும் விதத்தில் செயல்படுத்தப்பட்டால், இலவசங்களால் பலரது வாழ்வு சிறக்கும் என்பது உண்மை.
கேள்வி: அஹிம்ஸா முறையில் இந்தியா சுதந்திரம் பெற்றது சரியான வழியா? போர்முனையில் அமெரிக்கா சுதந்திரம் பெற்றது சரியான வழியா?
பதில்: இக்கரைக்கு அக்கரை பச்சை. இந்தியா சுதந்திரம் பெற்ற விதத்தை குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், "தற்காப்புக்காகத் தான் துப்பாக்கி வைத்திருக்கிறோம் என்றாலும் கூட அதன் இறுதி நோக்கம் சுடுவதுதான் என்றால் அந்தத் துப்பாக்கி எனக்குத் தேவையில்லை" என்பது சத்தியாகிரகத் தத்துவம். அதேபோல், போர் முனையில் சுதந்திரம் பெறுகிறோம் என்ற பெயரில், அப்பாவி மக்களைக் குண்டு போட்டுக் கொள்வதுதான் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரமே தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.
கேள்வி: சின்னத் திரையில் வரும் கதாபாத்திரங்கள் இதை விட அதிகமாக அழ முடியுமா?
பதில்: சின்னத் திரையில் வரும் கதாபாத்திரங்கள் இந்த அளவிற்கு அழுவார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு வரை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனாலும் இன்று அழுகிறார்கள்; அதையும் மாமியாரும் மருமகளும் ஒன்றாகப் பார்த்து அழுகிறார்கள். புதுமையான தொடர் என்று சொல்லி, சின்னத் திரையில் வரும் கதாபாத்திரங்கள் அழுகையின் அளவைக் கூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கேள்வி: இப்பொழுது வரும் எல்லா தமிழ் சினிமாக்களிலும் ரவுடிகளே ஹீரோவாக இருப்பது ஏன்?
பதில்: எல்லாப் படங்களிலுமே கிளைமாக்சில் வில்லன்களை ஹீரோக்கள் கொன்றுவிடுவதால், வில்லன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதாம். அதனால் ரவுடிகளையே ஹீரோவாகப் போட்டு, அதாவது ஹீரோவையே ரவுடியாகப் போட்டு, ரவுடித்தனம் பண்ணும் அந்த ஹீரோவையே வில்லனாகவும் போட்டு, வில்லத்தனம் பண்ணும் ஹீரோவாகிய அதே வில்லனை, ஏற்கனவே பெரிய ரவுடியான 'ரவுடி ஹீரோ' அடித்துத் துவைத்து... என் கதை எப்படி வித்தியாசமா இருக்கா?
கேள்வி: 'ஆரோக்கியமற்ற ஜனநாயகம்' அல்லது 'ஜனநாயகமற்ற ஜனநாயகம்' என்றால் என்ன?
பதில்: திமுக வென்றால் கருணாநிதி முதல்வர்; அதிமுக வென்றால் அம்மா முதல்வர். ஏதோ தமிழ்நாடே இவர்கள் இருவரின் தனிச்சொத்து என்பது போல் மாறி மாறி குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார்களே, இது தான் 'ஆரோக்கியமற்ற ஜனநாயகம்' அல்லது 'ஜனநாயகமற்ற ஜனநாயகம்'. அண்ணாவின் மரணத்தை அடுத்து, 1969-ல் முதல்வர் பதவியைத் தனதாக்கிக்கொண்ட திரு. கருணாநிதி அவர்கள், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், தன்னை விட வேறு திறமைசாலிகள் யாருமே தன்னுடைய இயக்கத்தில் இல்லாதது போல, இன்றும் முதல்வராக இருக்கிறாரே இதுதான் போலி ஜனநாயகம். இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது; ஆனால் இல்லை. அது தான் உண்மை நிலை.
கேள்வி: Splenda சாப்பிட்டால் ஞாபகம் குறைந்து கஜினி மாதிரி ஆகிவிடுவோம் என்பது உண்மையா?
பதில்: சில பேர் Splenda சாப்பிடாமலேயே கஜினி மாதிரிதான் இருக்கிறார்கள்! Splenda-வில் நச்சுத் தன்மை கொண்ட Sucralose இருப்பதால், அது உடம்புக்குக் கேடு என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆய்வுகள் தொடர்கின்றன. இந்தியாவில் கோக் மற்றும் பெப்சியில் அதிக நச்சுத் தன்மை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தும், கோக்கும், பெப்சியும் அமோகமாக விற்பனையாகவில்லையா? அப்படித்தான் இதுவும்.