Sunday, August 12, 2007

கிறிஸ்தவம் (தமிழ்க்) கலாச்சாரத்துக்கு விரோதியா?

என் இனிய தோழர்களே,

சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம். தமிழன் என்று சொல்வதில் எப்படி தலை நிமிர்ந்து நிற்கின்றேனோ அதுபோல கிறிஸ்தவன் என்று சொல்வதிலும் மாபெருமை கொள்கிறேன். அன்னைத் தமிழ் என்னை அரவணைத்து மகிழ்வதைப் போலவே, என்னைப் பெற்றெடுத்த மதமும், கல்வி முதற்கொண்டு எனக்குத் தேவையான எத்தனையோ அடிப்படை உரிமைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும், நீதிபோதனைகளையும் அள்ளியும், சொல்லியும் தந்திருக்கிறது. அதற்காய் என் முன்னோர்களைத் தலை வணங்குகிறேன்.

கிறிஸ்தவர்கள் மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் விரோதமானவர்கள் என சிலர் எண்ணுவதாக அறிகிறேன். மொழி மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், சினிமா போன்ற ஊடகங்களைப் பார்ப்பதையும், பொட்டு மற்றும் பூ அணிவதையும் பாவமான செயலாக கிறிஸ்தவர்கள் நினைப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுபற்றி என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கமாக ஒரு விளக்கமளிக்க விழைகிறேன்.

கிறிஸ்தவ மதம் என்று சொல்லும்போது அதிலே பல நூறு பிரிவுகள் இருக்கின்றன. நான் வாடிகன் நகரில் இருந்து செயல்படும் போப்பாண்டவரின் தலைமையில் இயங்கும் 'ரோமன் கத்தோலிக்க' பிரிவைச் சார்ந்தவன். சட்ட திட்டங்களும், கட்டுக்கோப்பும் அதேசமயம் தாராள மதச்சித்தாந்தங்களும் (Religious Liberalism) கொண்ட அமைப்பாகவே நான் இதை அறிகிறேன். என் மூதாதையர்கள் எந்தக் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள் என்பது தெரியாது. புனித தோமையார் இந்தியாவுக்கு வந்தபோதே மதம் மாறியவர்கள் இவர்கள் எனவும் சொல்லப்படுகிறது. என் உறவினர்களில் கிறிஸ்தவர் அல்லாதவர் ஒருவர்கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எமது உறவினர்கள் வாழும் ஊர்கள் யாவுமே கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்பவையாகவே இருக்கின்றன. எனது ஊரின் பெயரே மெக்கேல்பட்டி என்பதுதான். அந்த அளவுக்கு ஆழ வேரூன்றியிருக்கிறது எமது கிறிஸ்தவப் பயணம்.

இந்தப் பயணத்தில், மொழியையும் கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுமாறு எந்தச் சூழ்நிலையிலும் என் மதம் என்னை அறிவுறுத்தியதில்லை. எம்மவர் யாரும் அப்படி நடந்துகொண்டதும் இல்லை. மாறாக மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறோம். அதனால் தான் திருமணத்தின்போது மணமகள் ஒரு முழுத் தமிழ்ப் பெண்ணாகவே பட்டுச்சேலையும், பொட்டும், பூவும் அணிந்துகொள்கிறாள். தமிழ்த் திருமணங்களைப் போலவே, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதும், மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு. வாசிங்டன் வட்டாரத்தில் வசிக்கும் எண்ணற்ற கிறிஸ்தவர்கள், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் கட்டணம் செலுத்திய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்த ஒரிரு பாதிரியார்களும் அடக்கம்.

நான் சிறுபான்மையினனாக இருப்பதால், எந்த விசயத்திலாவது இந்தியாவுக்கு எதிராக என்றாவது நான் நினைத்ததுண்டா? என்று என்னுடன் பணியாற்றிய ஒரு தெலுங்கு நண்பர் ஒருமுறை வினவினார். ஆண்டவனை வழிபடுவதைப் போலவே, அன்னை பாரத மாதாவையும் இன்று வரை வணங்கிவருகிறேன் என்று பதிலளித்தேன். சில மேடைகளிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் நான் "மருதமலை மாமணியே முருகைய்யா..." என்ற பாடலைப் பாடியதுண்டு. நீங்கள் கிறிஸ்தவர் ஆயிற்றே, ஆனாலும் மருதமலை முருகனைப்பற்றி பொதுமேடையில் பாடினீர்களே என்று ஒருவர் ஆச்சரியப் பாராட்டு தெரிவித்தார். "நான் கிறிஸ்தவன் என்பது எப்படி உண்மையோ அதுபோல தமிழன் என்பதும் உண்மையே. முருகன் தமிழ்க் கடவுள். அவன் புகழ் பாடும்போது, என் தமிழுணர்வு பொங்கிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தத் தமிழ்க் கடவுள் மீது இருக்கும் பற்றினால், 2005-ல் நான் இந்தியா சென்றபோது, சற்றும் எனக்குச் சம்பந்தமே இல்லாத திருச்செந்தூருக்குச் சென்று வந்தேன்" என்று நான் விளக்கமளித்தபோது அவர் வியந்துபோனார். ஆம் நண்பர்களே, கூரிய கோடாரி கொண்டு என் நெஞ்சாங்கூட்டைக் கொத்திக் கிளறினால், அங்கே கொப்பளித்து சீறிட்டுப் பாய்ந்து வழியும் என் குருதி கூட, 'அன்னைத் தமிழ் வாழ்க' என்று உரக்கக் கூவிக்கொண்டே உறை நிலையை எய்தும். சாவதற்குள் தமிழுக்காக ஏதாவது செய்துவிட்டுத்தான் சாகவேண்டும் என்ற வேட்கை, இரும்புத் தாதுவை விட இன்னும் இறுக்கமாகவே என் உள்மனதில் குடிகொண்டிருக்கிறது.

மதத்திற்காக மொழியையும், கலாச்சாரத்தையும் விலக்கி வைக்கும் வெகுசிலர் இருப்பதை நான் அறிவேன். ஆண்டவனை வழிபடும்போது கூட, நமக்குத் தெரிந்த மொழியில் இருந்தால்தான், ஆண்டவனோடு உள்ளத்தால் ஒன்றிணைய முடியும் என்பதால்தான், தமிழ் உட்பட எத்தனையோ மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் லத்தீன் மொழியில்தான் எல்லா ஜெபமும் இருந்திருக்கும். இதுதான் கிறிஸ்தவ மதம் தாய்மொழிக்கு அளித்திருக்கும் சிறப்பு. மதத்துக்காக மொழியை இழந்துவிடாதீர்கள் என்றுதானே இதற்குப் பொருள்? அதுபோலத்தான் கலாச்சாரமும். இதை 'அவர்கள்' புரிந்துகொண்டால் சரி.

மனித வாழ்வு நிலையற்றது என்பதை நன்கறிவேன். அதற்குச் சிறந்த உதாரணம், 'தேன்கூடு' இணையதளதின் தூணாகச் செயல்பட்டுத் தமிழ்ப் பணியாற்றி இளம் வயதிலேயே சாவைத் தழுவிய திரு. சாகரன் (எ) கல்யாண் அவர்கள், சாத்தான்குளம் திரு. அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் திரு. ஆசிப் மீரான் அவர்களின் மனைவி திருமதி. ஜாஸ்மீன் என்று பலரைக் கூறலாம். என்னுடைய நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் என் பெற்றோர், உற்றாருக்குக்கூடத் தெரியாது. அதனாலே எழுதி வைத்திட முடிவெடுத்தேன்.

உங்களிடம் நான் வேண்டுவது இதுதான்: வெகுசிலர் இப்படி இருக்கிறார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் என்று கருதிவிடாதீர்கள். கிறிஸ்தவராக இருந்தும், தமிழுக்குப் பணியாற்றிய பலர் இருப்பதை அறியுங்கள். தஞ்சை மன்னன் சரபோஜியின் அரசவைக் கவிஞராக இருந்த வேதநாயகம் சாஸ்திரியார், திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவர் என்று தமிழுக்குப் பணியாற்றிய கிறிஸ்தவர்களின் பட்டியல் நீள்கிறது. வெரும் தமிழ் உணர்வாளனாக மட்டும் இல்லாமல், ஒரு தமிழ்க் கலைஞனாகவும் நான் இருக்கிறேன் என்பதையும் இங்ஙனம் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன தோழரே, எம்மையும் உம்மில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீரா? உம் தோளோடு தோள் நின்று தமிழ்ப் பணியாற்றும் வாய்ப்பினை எமக்கு நல்குவீரா? நன்றி.

18 comments:

ஜெகதீசன் said...

தோழரே,
நீங்கள் எப்பொழுதும் எம்மில் ஒருவர் தான. நம் மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒரே இனம்- தமிழினம். மதம் ஒருபோதும் நம்மைப் பிரிக்க முடியாது. தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை..
அன்புடன்
ஜெகதீசன்.

Anonymous said...

"மதம் ஒரு போதும் மனிதநேயத்தை உருவாக்கவில்லை"

வெகு சிலர் என்று நீங்கள் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை.

உங்களைப்போன்ற வெகுசிலர் தான் தமிழ்,தமிழ் கலாச்சாரத்தின் பால் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

கட்டுரைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.

அன்னைத்தமிழை வளர்ப்போம்,
மனிதம் மலரச்செய்வோம்.

உண்மைத்தமிழன் said...

Dear John..

Please see my writeup of "Maruthamalai Murugan" in this web address :

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_23.html

tomorrow I will send detailed comments tomorrow..

Thanks..

Unknown said...

மனம் நெகிழ வைத்த கட்டுரை.மதம் எதுவாக இருப்பினும் நாம் அனைவரும் தேசத்தால் இந்தியரும், மொழியால் தமிழரும், உணர்வால் மனிதருமாவோம்.மத,இன ஜாதி துவேஷங்களை அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்போம்.

Anonymous said...

வணக்கம், அன்பரே வாங்க, தயங்காது தங்கள் தமிழ்ப் பணியைத் துவக்குங்கள், கிறித்துவம் மட்டுமல்ல எந்த மதமும் எந்த மொழியையும் இழிவுபடுத்தி ஒதுக்குவதில்லை. மனத்தைத் தூய்மையாக்கி மனிதனை செந்நெறிப்படுத்தி அமைதியையும் அன்பையும் சமுதாயத்தில் ஊன்றி வளர்ப்பவைகள்தான் தான் மதங்கள். மனிதர்களை பேதப்படுத்தி பிரித்துப் பார்பதும் இழிவு செய்வதும் மதங் கொண்ட மனிதர்கள் தான். நான் கிறித்துவைப்பின் பற்றுபவன் நான் தமிழ்ப்பணி ஆற்றலாமா என்றொரு ஐயம், நாம் தமிழ் செய்யலாமா கூடாதா என்ற தயக்கம் தங்களுக்கு எந்த சூழ்நிலையால் ஏன் வந்தது எனத்தெரிய வில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் மனமும் பூஜைஅறையும் மதத்திற்குரிய இடமாகும், நம் வீட்டு சமையலறை, படுக்கையறையில் கூட அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. தயங்காது தமிழ் தாருங்கள்...

Anonymous said...

தமிழன் என்பவன் சாதி இன மொழி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன்.

Anonymous said...

> தமிழன் என்பவன் சாதி இன மொழி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன்,

ஆமாம்... அப்படி தான் வெளியில் தம் கட்டி சொல்கிறார்கள் .. ஆனால் உள்ளுக்குள்
அந்த மிருகம் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது தமிழனிடம். இன்னமும்
ஜாதிக் கலவரங்களும், மத வெறியும் , மொழிச் சண்டையும் தமிழனுக்குள் ஓயவில்லையே?
சம உரிமை, இட ஒதுக்கீடு என்று எதிலுமே மனம் ஒத்துப் போகவில்லையே..?

Anonymous said...

யார் என்ன சொன்னாங்க? ஏன் இந்தப்பதிவுன்னு புரியலை. இருந்தாலும் திரு ஜான் அவர்கள் மனம் புண்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். என்னோட வருத்தங்களும், ஆதரவுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ravikumar Veerasamy said...

ஐந்தறிவு ஜீவராசிகளுக்குத்தான் மதம் பிடிக்கும், ஆறறிவு மனிதனுக்கு "மதம்" என்ற மதம் பிடித்தால் மிருகமாகிவிடுவான்,
மொழி என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது ...
மொழி தோன்றிதான் மதம் தோன்றியிருக்குமே தவிர,
எந்த மதமும் மொழியை தோற்றுவிக்கவில்லை ...
கலாச்சாரம் என்பது வாழும் இடத்தையும், பிறந்த மண்ணையும், தன் கூட வசிக்கும் மக்களையும் பொறுத்து அமைவது, தாங்கள் பிறந்தது, வசித்தது தமிழ் மண்ணில், இதில் மதம் உங்களை ஒரு வேளை கட்டி போட நினைத்தாலும் அது முடியாது, அது உங்கள் எழுத்திலேயே நன்கு தெரி(றிக்)கிறது. உங்களை யார் இப்படி எழுத தூண்டியது என தெரியலை, மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சேவை செய்ய நீங்கள் யாருடைய அனுமதியும் கோரவும் தேவையில்லை, அது உங்கள் பிறப்புரிமை ...
தொடரட்டும் உங்கள் சேவை

Unknown said...

Hi John,
We are always with you, could you please continue your service for OUR MOTHER TAMIZH?
Don't worry about the FEW

Anonymous said...

"என்ன தோழரே, எம்மையும் உம்மில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீரா? உம் தோளோடு தோள்
நின்று தமிழ்ப் பணியாற்றும் வாய்ப்பினை எமக்கு நல்குவீரா? நன்றி."


தோழரே என் விளித்து விட்டு,
தோள் சேர உத்தரவா..?

சீகன் பால்க் ஐயர்,
ஐடா ஸ்கடர்..
இவர்களை சொல்லவில்லையே..
முதன் முதலில் தமிழில் காகித அச்சுக்கள் யாரால் வந்தன..
நிறைய சொல்லலாம்..

நம் கிறித்துவ மதம் தானே,,
வேத நூலை தமிழாக்கம் செய்து
அதையும் அனுமதிக்கிறது..
மொழியைத் தழுவும் வேதம்..

உமக்கு யார் மன வேதனை கொடுத்தாரோ..
ஒரு இந்துவாகிய நான் உம்மிடம் கோருகிறேன்..
வாரும்..
தமிழ்த் தொண்டாற்றும்..

தமிழ், மதம், நிறம், காலத்திற்கப்பாற்பட்டது..

"மதம் எதுவாயினும் மனுஷன் நன்னாயிருந்தால் மதி" -- திரு நாராயண குரு

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை..
உன்னைக் கை விடுவதுமில்லை... பைபிள்.

Agathiyan John Benedict said...

தோள் கொடுத்து எமைத் தாங்க முன்வந்த தோழர்கள் அனைவருக்கும் கோடிகளில் நன்றி.

Anonymous said...

Most of the time I do have the same thoughts as you have. I do have lots of hindu friends than christians.
I think you're doing great.
Keep up the good work.

Anonymous said...

Dear Brother,

Please continue your service, as long as it doesn't hurt others.

As far as my knowledge is concerned, neither God nor great personalities escaped from criticism. Hence please continue your service.

Our popular singers, Soundarrajan/AVM Raja's mother tonuge is Sowrashtra. I believe that they have been entertaining Tamilians for decades. No one objected it.

I am from sowrashtrian family. My mother tongue is Sowrashtra. I read Indian epics, spiritual news, newspaper and everything in Tamil. I always feel happy that i learnt Tamil and continue reading it.

The bottomline is that the caste and language doesn't intefere each other.

We are all with you.

Anbudan,
Rajkumar

Anonymous said...

நண்பா,
நான் ஒரு உருது பேசும் இச்லாமிய குடும்பத்தில் பிறந்த கிருச்தவள், என் கணவர், தேவராய் பிறந்து கிருச்தவர். இருவருக்கும் தமிழ் மேல் பற்று. அவர் கவிதை
எழுதுவார், நான் ரசிப்பேன்.

உண்மை அடியான் said...

நண்பரே உங்களின் தமிழ் பற்றுக்கு என் வந்தனம்.]


http://unmaiselvam.blogspot.com

http://unmaiadiyann.blogspot.com/

Anonymous said...

Dear friend,
I am 75 and served in various parts of India. I have travelled all over the country including Mizoram and Meghalaya where Christians form the majority.
I agree with every word of what you have stated. I consider it a statement of faith of the majority of the Christians in India.
Religions never preach hatred. They teach hormony.
I am proud of you.
My hearty blessings.
S. Krishnamoorthy

Unknown said...

வலையின் தோழரே வணக்கம்
உங்களின் கட்டுரை வாசித்தேன்
உங்களின் கட்டுரையை விமர்சிப்பதற்ககா
அல்ல நீங்கள் தமிழ்யின் பற்று உள்ளவரக
இந்து பாடல் பாடலம்,திருச்செந்தூருக்குச் செல்பவராககா
இருக்கலம் அதர்க்காக கூரிய கோடாரி கொண்டு
என் நெஞ்சாங்கூட்டைக் கொத்திக் கிளறினால், அங்கே
கொப்பளித்து சீறிட்டுப் பாய்ந்து வழியும் என் குருதி கூட,
'அன்னைத் தமிழ் வாழ்க' என்று சொல்லகூடாது
ஒரு கிறிஸ்துவன் உலக வாழ்க்கையின்
நிமித்தம் கூற கூடாது
கர்த்தர் உங்களை இரச்சிப்பாரக