இன்றைய (தமிழ்) சினிமாவில் வன்முறை
குறிப்பு: எடிட்டர் என்ற முறையில் வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் "தென்றல் முல்லை" இதழுக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை கீற்று, நிலாச்சாரல் உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமாகியுள்ளது.
'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று சொல்லி மாபெரும் தேசத்தின் சுதந்திரப் போரே அமைதியான வழியில் அன்று ஒரு முடிவுக்கு வந்தது அந்த அஹிம்சாவாதியின் திருமுயற்சியால். ஆனால் இன்று அதே தேசத்திலே, கத்தியின்றி இரத்தமின்றி சினிமா படம் வெளிவருவதில்லை. நீரோட்டம் இன்றிக் காய்ந்துபோய் கிடக்கும் காவிரி ஆற்றின் அவல நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம், சில வருடங்களாகியும், இன்றுவரை வெளியானதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் 'இரத்த ஆறு' ஓடும் எத்தனையோ படங்கள் வெளிவந்து, வெற்றிபெற்று, நிறைய மகசூலும் கண்டுவிட்டன.
தற்போது வெளிவரும் பெரும்பான்மையான தமிழ்த் திரைப்படங்களில் 'அரிவாள்' தான் அதிகாரப்பூர்வமற்ற கதாநாயகன். படம் ஆரம்பிக்கும்போதே, கொலைக்காரக் கும்பல் ஒன்று அரிவாளோடு யாரையோ இராத்திரி இருட்டில் துரத்துவதுபோலவும், இடையிடையே பன்றிக்கூட்டங்கள் பயந்து ஒதுங்குவது போலவும் காட்டி நம்மை மிரட்சியடையச் செய்து, ஓடிக்கொண்டிருக்கும் உதிரத்தை ஒரு நொடியிலேயே உறையச் செய்துவிடுகிறார்கள். மனிதனைக் கத்தியால் குத்துவதை அப்படியே ஒளிவு மறைவின்றி பச்சை பச்சையாகக் காட்டுகிறார்கள். காட்சிக்குச் காட்சி பச்சை இரத்தம் பரிமாறுகிறார்கள்.
கிராமத்துப் பொட்டல் காட்டுப் புழுதிக் காற்று மட்டுமே படிந்திருக்கும் 'வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா? ஹீரோவும், ஹீரோயினும் தங்களின் பால்ய வயதிலேயே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதைக் காட்டுவதற்காக, கடலை பிடுங்கி சாப்பிடுவது, நொங்கு வண்டி ஓட்டுவது, பம்பரம் விடுவது போன்ற என்றுமே நெஞ்சில் இனிக்கும் காட்சிகளைக் காட்டி சிறியவர் பெரியவர் என எல்லோரையும் கவர்ந்து இழுத்து அமரவைத்து, தடாலடியாக கத்திக்குத்து காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். எண்ணற்ற படங்களில் அதன் உக்கிரக் காட்சிகளில் எல்லாம் வக்கிரம் தொனிக்கிறது.
கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடக்கும் கதாநாயகியை, 4 பேர் மாறி மாறிக் கற்பழிக்கும் காட்சியை (படம்: பருத்தி வீரன்) முழுவதுமாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்களே, எப்படித்தான் நாமெல்லாம் அதைக் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ? 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்ற அளவில் மறைவான சூழ்நிலையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு அரிதான நிகழ்ச்சியை, இப்படி நம் கண்ணெதிரே போட்டுக்காட்டுகிறார்களே, இது வன்முறைக்குத் துணை போவதாகாதா? ஒரு படத்தைவிட மறு படத்தில் அதிகமான வன்முறை இருக்கவேண்டும் என்று இயக்குநர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதியை வகுத்துக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. 'ரொம்ப நல்ல படம்' என்று விமர்சிக்கப்பட்ட 'வெயில்' படமும் இந்த வன்முறையின் வக்கிரத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. இப்படி எத்தனையோ சமீபத்திய படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்; பதிவு செய்ய இடம்தான் போதாது!
நாட்டில் உண்மையிலேயே நடந்த சில கொலை நிகழ்ச்சிகளை, நிழற்படங்களாக ஒரு சில தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன என்பதற்காக எத்தனையோ கண்டனக்குரல்கள் எழுந்தன; எதிர்ப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டன. அதை ஏற்று, தற்போது அந்த நாளிதழ்கள் அப்படிப்பட்ட படங்களைப் பிரசுரிப்பதில்லை. பாராட்டுக்கள். ஆனால், மக்களை வெகு எளிதில் சென்றடையும் வகையில் சினிமாவில் 'ஒலி-ஒளி' வடிவில் காட்டப்படும் இந்த வன்முறைக்காட்சிகளைக் கண்டித்து பெரிய அளவில் கண்டனங்கள் வந்ததாக நான் அறியவில்லை. சினிமா விமர்சனம் எழுதுபவர்களும் கூட, நல்லக் காட்சிகளைப் பற்றி மட்டுமே எழுதிவிட்டு, குறைகளை நாசுக்காகக் கூட சுட்டிக் காட்டாமல் ஊளக்கும்பிடு போடுவதன் உள்நோக்கம் தான் என்னவோ? வன்முறையாளனாக, கொலைக்காரனாக நடித்த ஹீரோ, 'அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறார்' என்று பஜனை பாடி பல்லக்குத் தூக்குகிறார்கள் பலர். 'நீங்கள் நல்ல விசயத்தை மட்டுமே பாருங்கள்; கெட்டதைப் பார்க்காதீர்கள்' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் நல்லவனாக வாழ்ந்த ஒருவன், ஒரே ஒரு கொலை செய்துவிட்டான் என்பதற்காக அவனை நீதியின் முன் நிறுத்தாமல் விட்டுவிடுகிறோமா? இல்லையே.
சிலர் தங்களின் படங்களில் ஒட்டு மொத்த பெண்ணினத்தையே 'திமிர்' பிடித்தவர்களாக திரும்பத் திரும்பக் காட்டுவது பெண்களை இழிவுபடுத்துவதேயன்றி வேறென்ன? வெறும் ஆயிரக்கணக்கானவர்களை மட்டுமே சென்றடையும் பொது நிகழ்ச்சியில் பேசும்போது வாய்தவறி பெண்ணை 'அவள்' என்று சொல்லிவிட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; பொது மன்னிப்பு கோருகிறார்கள். நியாயம் தான். ஆனால், பல கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் சினிமாவில் 'தேவடியா' என்று சொல்வதை யாரும் கண்டுகொள்வதில்லையே ஏன்? அல்லது கண்டும் காணாமல் இருப்பது ஏன்? பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற இந்த நிலைக்கு முடிவுகட்ட, பெண்ணியப் பற்றாளர்கள் இனிமேலாவது முன்வருவார்களா? லஞ்சத்தை ஒழிக்க சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதைப்போல, தரங்கெட்ட சினிமாக் காட்சிகளை எதிர்க்க ஓர் அமைப்பை உருவாக்க ஆவணம் செய்வார்களா? ஏனெனில் பெண்ணைக் கேவலப்படுத்துவதும் வன்முறைக்குச் சமமானதே!
10 ரூபாய், 50 ரூபாய் லஞ்சம் வாங்கியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்க, பலகோடி ஊழல் செய்தவர்கள் நாடாள்வதும், பெரிய மனிதர்களாக உலாவருவதும் நாம் அறிந்ததுதான். அதாவது, செய்யும் தவறையே பெரிதாகச் செய்துவிட்டால் அந்தத் தவறு, தவறு அல்ல என்று ஆகிவிடுகிறது. அதுபோல, வன்முறையைத் தூண்டும் விதமாகப் 'பேசி'னாலே ஒருவன் சிறையில் அடைக்கப்படும்போது, ஜாதி மோதலைத் தூண்டும் வசனங்களையும், வன்முறைக் காட்சிகளையும் மூலதனமாக்கிப் படமெடுத்து, படைப்பாளிகள் தங்களின் பாக்கெட்டை பணத்தால் நிறைத்துக்கொள்கிறார்களே, இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமில்லையா? குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தப்பட வேண்டியதல்லவா? இந்த வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்களின் மனமெல்லாம் கல்லாகிப்போய்விடாதா? நாமும் அப்படிச் செய்யவேண்டும் என்று அந்த இளம்பிஞ்சுகளைத் தூண்டிவிடாதா?
தலையில் சரியாக முடி இல்லாதவர்கள் கூட, அழகான ஆறடிக் கூந்தல் இருப்பதுபோல் சிகை அலங்காரம் செய்துகொண்டு வந்து தன் ரசிகனை ஏமாற்றி, அவனுடைய குடிசையில் அடுப்பெரிய உதவும் அந்த அஞ்சு பத்து ரூபாயையும் பறித்துக்கொண்டு, ஈவு இரக்கமின்றி தன் ரசிகனின் குடும்பத்தையே குழியில் தள்ளுகிறார்களே, இந்தப் பித்தலாட்டத்தை எல்லாம் நாம் எப்போது உணரப்போகிறோம்? "அத்தனை பேரும் வெள்ள வெளேர் என்று மின்னுவார்கள்" என்று எம்மக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் கூட எத்தனையோ கருப்பு நிறத்தவர்கள் நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் கருப்பு நிறத்தவர்களையே உள்ளடக்கிய எம் பாரத தேசத்தில் எடுக்கப்படும் படங்களில் உள்ள எதார்த்தம் யாவரும் அறிந்ததே. இலவசமாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள், தமது அணி தோற்றுவிட்டதால் அந்த கிரிக்கெட் வீரர் கட்டிய வீட்டைத் தாக்கினார்கள். தவறுதான். ஆனால் காசு கொடுத்து போய் பார்த்த சினிமா, கண்ட்ராவியாக இருந்தும் அதன் படைப்பாளிகள் மற்றும் நடிகர், நடிகைகள் மீது சிறிது கோபம்கூட வருவதில்லையே, அது ஏனோ? 'சினிமா இந்த நாட்டைப் பிடித்த நோய்; சினிமாக்காரர்கள் எல்லாம் கூத்தாடிகள்; நாடு உருப்படவேண்டுமானால், சினிமா ஒழிக்கப்படவேண்டும்' என்று உரத்த குரல் கொடுத்தானே, அந்த பெரியார் ஈ.வெ.ரா.-க்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற சமுதாயச் சீரழிவுக் காட்சிகளை சினிமாவில் காட்டக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மருத்துவர் ராமதாசு அவர்கள் பாராட்டுக்குரியவரே.
சினிமா ஒரு பொழுதுபோக்காம். அடுத்தவனை 'போட்டுத் தள்ளுவது' எப்படி என்று வெள்ளித் திரையிலே மணிக்கணக்கில் போட்டுக் காட்டுகிறார்களே, அதைப் பச்சைக் குழந்தைகளைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு குடும்பத்தோடு அமர்ந்து பார்த்துவிட்டு, அங்கே திரையிலே பரிமாறப்படும் அந்தப் பச்சை இரத்தத்தை நாமும் பருகிவிட்டு அந்தப் பச்சைக் குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டு வருகிறோமே, அது தான் பொழுதுபோக்கா?
புகை பிடிப்பவர்களைவிட அதனை சுவாசிப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். அதுபோல, சினிமா எடுப்பவர்களைவிட அதனைப் பார்ப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். இரத்தக் கறை படிந்த இதுபோன்ற படங்களையே பார்த்துவிட்டு, ஒன்றுக்குமே உதவாத சில மசாலாப் படங்களைப் பார்க்கும்போது, 'அப்பாடா... இது பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஆதலால் படைப்பாளிகளே, நீங்கள் ஒன்றும் கருத்துச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை; 'வன்முறை' இருக்கக்கூடாது என்று ஒரு 'வரைமுறை'யை ஏற்படுத்திக்கொண்டு படம் எடுங்கள்... இப்போதைக்கு அது போதும்.
21 comments:
நல்ல கட்டுரை மிக மிக அவசியமானதும்கூட
I went through your article. It really looks and sounds good. Writers like you and me should seek and make use of every chance to express our distress on the violent prevalence of VIOLENCE in the cine field. I fervently wish and pray that the message conveyed in your essay should reach the persons culpable of inserting such crimes in the cinema. Go ahead; proceed with serving our people incessantly in such issues.
அருமையாக இருந்தது அண்ணா, முழுமையாக படித்தேன், குறிப்பாக அந்த பருத்திவீரன் என்னை மிகவுமே பாடாய் படுத்திவிட்டான், சிலவிஷயங்களை இலைமறை காய்மறையாக சொல்வதே
நல்லதென்றே தோன்றுகின்றது அண்ணா, என் இரண்டு இரவுகளை எடுத்துக்கொண்ட விஷம் அந்த
படம்...:(
நன்று. நீங்கள் கூறும் கருத்துகளை யாரும் சிந்தித்ததே கிடையாது
என் கருத்துக்களை ஆமோதித்து பின்னூட்டமிட்ட தோழர்கள் முரளி கண்ணன், தோபியாள் மெக்கேல், சிவ சங்கர் மற்றும் அனானியார் ஆகியோருக்கு நன்றிகள் பல.
வாழ்த்துக்கள் ஜான் ஐயா!
அன்பு ஜான்,
தங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது. இதே முறையில் தாங்கள் சிறாப்பாக விளங்கும் திரைப்படங்களைப் பற்றியும் கட்டுரைகள் எழுதலாமே.
// 'அரிவாள்'தான் திகாரப்பூர்வமற்ற கதாநாயகன்.//
உண்மை.
சில வருடங்களுக்கு முன் நடிகர் நெப்போலியன் குவைத்துக்கு வந்தார். அப்பொழுது நடந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் அவரை ஒரு அரிவாள் தூக்குபவராகவே
பெருமைப் படுத்தி பேசினர். கடைசியாக பேசவந்த அவர் நான் அரிவாள் மட்டும்
தூக்கவில்லை. வேறு பல நல்ல காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் உங்கள் மனதில் அரிவாள் தான் பதிந்துள்ளது. இது எனக்கு உண்மையிலெயே மனவருத்தத்தை
தருகிறது என கூறினார்.
அன்பு ஜான் மிகவும் நன்றாக இருக்கிறது கட்டுரை
மேலும் தொடரட்டும் ,,,வாழ்த்துக்கள்
நன்றாக வந்திருக்கின்றது ஜான்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
// இதே முறையில் தாங்கள் சிறாப்பாக விளங்கும் திரைப்படங்களைப் பற்றியும்
கட்டுரைகள் எழுதலாமே. //
நல்ல யோசனை; வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுகிறேன். நன்றி.
அன்புள்ள நண்பர் ஜான்,
உங்கள் எழுத்துகளில் உங்களின் ஆதங்கம் தெரிகிறது. இந்த
நிலைமை சீரடைய என்ன செய்யலாம்? சில எண்ணங்கள்.
ஒன்று, வன்முறை இல்லாத படங்களுக்கு ஏதாவது சலுகைகளை வழங்கலாம்.
இரண்டு. சென்சார் போர்டில் "வன்முறை" க்கு ஒரு "சரியான" definition" கொடுத்து அதை மீறும் ஒவ்வொரு படத்தையும் தடை செய்யலாம்.
மூன்று. மக்கள் "வன்முறை" இருந்தால் படம் பார்க்கமட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு அதைக் கட்டாயமாக பின்பற்றலாம்.
இவற்றில் ஏதேனும் நடக்குமா ?
பாராட்டியதற்கு நன்றி திரு. சிங்கை குமார் அவர்களே.
தீர்வுக்கான உங்களின் எண்ணங்களும் சரியானதே. குறிப்பாக முதலாவது எண்ணம் செயல் முறையில் சாத்தியம் தான். அதற்கு உதாரணம், தமிழில் பெயர் கொண்ட படங்களுக்கான வரிவிலக்கு.
யோசிக்கவேண்டிய முக்கியமான ஒரு விசயம் இது. காலத்திற்கு தகுந்த கட்டுரை. வாழ்த்துகள் நண்பரே.
A very good commentary. I wish this can be given wider publicity rather than just on Nilacharal
மிகவும் அறுமை
HI this message is obsaloutly true.But small suggestion any information lets move into simple people. so that is very good messege,so you forward with any magazine.
thanks®ards
kodis.k
இந்த காலகட்டதில் வரும் படம் யெல்லாமெ சன்டை சட்சரவோடு வரும் படம்தன் எடுக்கிரர்கல். "பாரதி " போன்ட்ர படங்கல் யெடுக்க வேன்டும். நாட்டுபட்ரு போன்ட்ர படங்கல் எடுக்கவென்டும்.
சொல்லப்பட்டது அனைத்தும் உண்மை.ஆனால் பூனைக்கு யார் மணிக்கட்டுவது?
Chitra
ஜான்,
சிந்திக்க வைக்கும் நல்லதொரு கட்டுரை.
நன்றி - சொ. சங்கரபாண்டி
John, Its a nice article, there should be some restriction to the amount of violence.
I also have to disagree with teh part were you are saying that we sit and watch teh movie with the kids, would'nt it be teh parents responsibility not to take the kids to such movies, rather than blaming the producer/director. Parental Guidance, needs to be implemented.
My 2 cents.
Post a Comment