அமெரிக்கன் பேபி
குறிப்பு: இந்தக் கவிதை திண்ணை , "தென்றல் முல்லை" மற்றும் வார்ப்பு இதழ்களில் பிரசுரமாகியது
ஆகாயத்தில் பறந்து
ஆயிரமாயிரம் மைல் கடந்து
அப்பனும் ஆத்தாளும்
அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால்
அமெரிக்கன் சிட்டிசன்
ஆனாயே நீ தானே
அயல் தேசம் பிறந்ததனால் - நீ
அத்தை மாமா அறியலையே
அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு
ஆடிப் பாடவும் முடியலையே
அம்மாயி அப்பத்தா
அவர்களின் புருஷன் உன் தாத்தா
அணைத்து மகிழும் வாய்ப்பு ஒன்றை
அவர்கட்கு நீயும் அளிக்கலையே
அன்பாய் வளர்த்த பசு மாடு
ஆறாவதாய் ஈன்ற கன்று ஒன்று
அன்னை மடியை முட்டி முட்டி
ஆர்வமாய்ப் பால் குடிக்கும்
அழகை நீயும் காணலையே
ஆண்டுக்கு ஒரு முறை
அமர்க்களமாய் ஊர்த் திருவிழா
ஆட்டுக் கிடா வெட்டி
அய்யனாருக்கு விருந்து படைக்கும்
அதிரடியை நீயும் அறியலையே
குளுகுளு சீசனிலே
குற்றாலமலை அருவியிலே
குளித்து மகிழும் பாக்கியம்
குழந்தை உனக்குக் கிட்டலையே
ஆட்டுக் குட்டியை தூக்கிக்கொண்டு
ஆடு மாட்டை ஓட்டிச் சென்று
அருகம் புல்லை மேயவிட்டு
அந்தி சாய வீடு திரும்பும்
அற்புதம் உனக்கு வாய்க்கலையே
ஆற்றங்கரையில் நடை பயின்று
ஆல விழுதில் ஊஞ்சலாடி
அரப்பு தேய்த்து ஊற வைத்து
அம்மனமாய் குளியல் போடும்
ஆனந்தம் உனக்குக் கிடைக்கலையே
அன்பு மகனே மகளே
அறியாத வயது உனக்கு
அனுபவித்து இழந்ததனால் எழுதுகிறேன்
அப்பன் நான் ஒரு கிறுக்கு
11 comments:
கண்ணைத் திறந்து கொண்டே இன்றைய அப்பா, அம்மாக்கள் செய்யறதை எளிமையாகவும், இனிமையாகவும் சொல்லி இருக்கீங்க. எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் நலம்.
கீதா அம்மா, நன்றி. ஒரு பிழை இருந்தது; சரிசெய்துவிட்டேன். வேறு ஏதேனும் இருந்தால் தயவுசெய்து சுட்டவும்.
அற்புதமான கவிதை.
முழுமையாகவும் எளிமையாகவும் நின்று உணர்த்தியது
இந்த காலத்தில் நகரத்தில் வாழும் குழந்தைகள் எவ்வளவு அருமையான அனுபவங்களை இழக்கிறார்கள் என்பது வேதனையடைய செய்கிறது.
அன்பு ஜான்,
கிராமத்துச் சூழலில் என் சிறுவயது வாழ்க்கை அமைந்ததால் இந்த இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டின. ஆனால் என் குழந்தைகள்
பிறப்பிலிருந்தே நகரவாசிகளாக இருப்பதால் அவர்களுக்குக் கிட்டவில்லை.
இத்தகைய சுகங்கள் தற்காலக் குழந்தைகளுக்கும் கிட்டும் வகையில் ஏதேனும் ஓர் திருவிழா போல அமைக்கலாம்.
உங்கள் அனைவரின் பாராட்டுதல்களுக்கு நன்றி.
பெனடிக்ட்,
உங்கள் மின்னஞ்சல் முகவரியை djmilton at gmail.com -க்கு அனுப்பி வையுங்கள்.
Dear Brother,
It is a nice kavithai. Can you please send me it as a pdf or other format of the file. I would like to send it to IIT- Bomaby yahoo group.
Thanks,
Dr. Subramanian Thangaiah Ph.D (IIT-B)
Lexington, KY-40508, USA
நல்ல காட்சிகள். தமிங்கிலத்தைத் தவிர்த்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
குடிமகன்/குடிமகள் என்று எழுதலாம்.
குளுகுளு சீசனாம். காலம் என்ற சொல் பொருந்தாதோ.
//அன்பு மகனே மகளே
அறியாத வயது உனக்கு
அனுபவித்து இழந்ததனால் எழுதுகிறேன்
அப்பன் நான் ஒரு கிறுக்கு//
கண்கள் பனித்துவிட்டன.
arumaiyaan kavithai. namathu sugathukkaaga kuzanthaigalukku naam izaipathu thurogam.. :(
vaazthukkal
Post a Comment