Saturday, September 15, 2007

கேப்டன் விஜயகாந்த் அவர்கட்கு...


குறிப்பு: இந்தக் கட்டுரை மே 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னான சூடான சூழ்நிலையில் எழுதப்பட்டது.

தனி மனிதனாய் அரசியல் களம் இறங்கி, மே 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 28 லட்சம் வாக்காளர்களைத் தன் பின்னே அணிதிரள வைத்த மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் 'கேப்டன்' விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

அய்யா, நான் சினிமா விரும்பி அல்ல. சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே பார்ப்பதுண்டு. சினிமா சம்பந்தப்பட்ட உங்களின் நடவடிக்கைகளை விட அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட உங்களின் நடவடிக்கைகளை அதிகம் கவனித்து வந்திருக்கிறேன். சினிமாவில் சம்பாதித்த புகழையும், கூட்டத்தையும் வைத்து அரசியலில் அறுவடை செய்யத் துடிக்கும் கலைஞர்களுக்கு மத்தியில், உண்மையிலேயே அரசியல் ஆர்வமும், நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடும் கொண்ட உங்களைப் போன்ற கலைஞர்கள் அரசியல் களம் புகுவது முற்றிலும் தகுதியானதே. அந்த வகையில், உங்களின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன்.

சரியான நேரத்தில் கட்சியை ஆரம்பித்தது, மற்ற கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் உங்களின் தனித்தன்மையைக் காத்தது, தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் சிந்திய வியர்வை, எதார்த்தமான பாணி, உங்களின் கடின உழைப்பு என உங்களின் வெற்றிக்கான காரணங்கள் பலவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மக்களின் இந்த அங்கிகாரத்தை தக்கவைப்பதற்கும், எதிர்காலத்தை உங்கள் வசப்படுத்துவதற்கும் நீங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது என்பதை நீங்களே அறிவீர்கள்.

மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து நீங்கள் எப்படி வேறுபட்டவர் என்பதை நிருபிப்பதற்கு ஒட்டு மொத்த தமிழகத்தின் சார்பில் விருத்தாச்சலம் மக்கள் கொடுத்திருக்கும் ஆயுதம் தான் உங்களின் எம்.எல்.ஏ பதவி. உங்களின் விருத்தாச்சலம் தொகுதியை மற்ற 233 தொகுதிகளிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டியது உங்கள் முன்னிருக்கும் மாபெரும் சவால். விருத்தாச்சலம் தொகுதியின் வளர்ச்சி சாமான்ய மக்களின் வெற்றுக் கண்களுக்கும் புலப்படும் வகையில் இருக்கவேண்டும். இதில் நீங்கள் அடையும் வெற்றியைப் பொருத்துத் தான் உங்கள் இயக்கத்தின் எதிர்காலம் இருக்கிறது.

ஊழல் ஒழிப்பு பற்றி கவர்னர் உரையில் எந்த அறிவிப்புமே இல்லையே என்று நீங்கள் சட்டமன்றத்தில் பேசிய முத்தாய்ப்பான பேச்சு பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும், இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. பாராட்டுக்கள். ஊழலை ஒழிக்க கிஞ்சிற்றும் நடவடிக்கை எடுக்காமல் வித விதமான திட்டங்களை அறிவிப்பது பெரும்பயன் தராது. ஓட்டையை அடைக்காமல் களஞ்சியத்தில் தானியத்தைக் கொட்டிய கதையாகத்தான் இது இருக்கும்.

திருமணமும், வரதட்சணையும் போலத்தான் இன்றைய அரசு அலுவலகங்களும், லஞ்சமும் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. லஞ்சம் வாங்காமல் இருக்க முடியும் ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது. நிறைய வரதட்சணை வாங்குவதை எப்படி சிலர் கௌரவமாக நினைக்கிறார்களோ, அது போல லஞ்சம் வாங்கி பெரும் பொருள் சேர்ப்பதும் ஒரு வித "திறமையே" என்று மக்களை எண்ணிட வைத்ததில் அரசு ஊழியர்களின் பங்கு மகத்தானது. நிறைய வழக்குகள் இருந்தாலும், லஞ்சம் வாங்கியதற்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகவோ, அவர்களின் சொத்துக்கள் பறி¢முதல் செய்யப்பட்டதாகவோ எந்தத் தீர்ப்பும் வராதது, ஊழல்வாதிகளை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. இது வேதனையான உண்மை. நீதித்துறையும் ஊழலுக்கு அப்பாற்பட்டது அல்ல. 40% நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி திரு. பரூக்ஷா அவர்களே வெளிப்படையாகச் சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

எந்த விசயத்திற்காக அரசு அலுவலகத்தை நாடினாலும், அதிகாரத் தோரணையோடு பேசி, எதாவது இல்லாத விதிகளையும், குறைகளையும் சொல்லி மக்களை எப்படி லஞ்சம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் +1 படித்தபோது சாதிச்சான்றிதழ் வாங்குவதற்காக எல்லோரையும் போலவே நானும் பல நாள் அலைந்தேன். தாசில்தார் கையெழுத்திட்ட பிறகு அதை எடுத்துவந்து எங்களிடம் கொடுக்க அங்கிருந்த ஊழியர் லஞ்சம் கேட்டார். தந்தையுடன் வந்திருந்த என் சக மாணவர்கள் ரூ. 5 கொடுத்து சான்றதழை வாங்கிக் கொண்டார்கள். நான் லஞ்சம் கொடுக்கவில்லை. மறு நாள் காலை பள்ளி செல்லாமல் மீண்டும் தாசில்தார் அலுவலகம் வந்தேன். அந்த ஊழியர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல், நானும் ரூ. 5 கொடுத்து சான்றிதழை வாங்கிச்சென்றேன். ஊழல், லஞ்சம் என்றால் என்ன என்றே தெரியாத அந்த வயதிலும் என்னை எப்படி அந்த ஊழியர் லஞ்சம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கினார் பாருங்கள். அந்தக் காலக்கட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்யும் பெண்களுக்கு ரூ. 4-ம், ஆண்களுக்கு ரூ. 5-ம் சம்பளம். ஆக, அந்த ஊழியர் என்னிடம் லஞ்சமாகப் பெற்றது வெறும் 5 ரூபாய் அல்ல; மாறாக, அது என் தாயின், என் தந்தையின் ஒரு நாள் வயல்வெளி உழைப்பு அய்யா! வசதியாக இன்று நான் வாழ்ந்தாலும் கூட, அந்த அரசு ஊழியரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால், என்னுடைய அந்த 5 ரூபாயைச் சத்தியமாகத் திரும்பக்கேட்பேன்.

தமிழ் நாட்டில் இருந்த கொஞ்ச காலத்தில் அரசு அலுவலகங்களுக்குச் சென்ற போதெல்லாம் ஊழலுடன் உரசிப்பார்த்திருக்கிறேன். என்றுமே ஊழல் தான் வென்றது! என்னுடைய அனுபவத்தில், ஊழலின் உறைவிடமாகச் செயல்படுபவை RTO அலுவலகங்களே. நான் "எழுத்துத் தேர்வு" எழுதவே இல்லை; ஆனாலும் என்னிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓட்டுநர் உரிமம் கொடுத்துவிட்டார்கள். நான் வாகனம் ஓட்டிக் காண்பித்தது சரியில்லை என்று சொல்லி, கூடுதலாக ரூ. 100 வாங்கிக்கொண்டார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் ஒரு RTO அலுவலகத்தில் ரெய்டு நடக்கப்போவதாக வதந்தி கிழம்பியதும் அலுவலர்கள் பணத்தை ஜன்னல் வழியாக அள்ளிவீசியதை செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின. ஆனாலும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லையே! இப்படிக் காடு மேடெல்லாம் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிப்பதில் நீங்கள் மிகுந்த விவேகமுடன் நடந்து கொள்ளவேண்டும்.

நீங்கள் உங்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு, உடனே அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கும், RTO அலுவலகத்திற்கும் விஜயம் செய்ததை அறிந்தேன். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், ஊழல் ஒழிப்பின் அவசியத்தை அரசு அலுவலர்களிடம் மிக நயமாகவும், மிக மிகத் தேவை என்றால் மட்டுமே அதிரடியாகவும் எடுத்துச்சொல்லி அவர்களை முழுமனதோடு ஊழல் ஒழிப்பில் பங்கெடுக்க வைக்கவேண்டும். முள்ளை முள்ளால் எடுக்கவேண்டிய இந்தக்காரியம் அவ்வளவு சுலபமானதல்ல. ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதுதான் உங்களின் இலட்சியமாக இருக்கவேண்டுமே தவிர, அரசு அலுவலர்களை சும்மா பயமுறுத்துவதோ அல்லது அவர்களைப் பந்தாடுவதோ அல்ல என்பதில் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். அரசு ஊழியர்களை நன்னெறிப்படுத்தும் சர்வ வல்லமையும், துணிவும் தன்னகத்தே இருந்தும், கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தாமல் போனதால், அரசு ஊழியர்களின் வெறுப்பை மட்டும் தான் சம்பாதித்தார்களே தவிர, மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் விளையவில்லை. அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள பலமான அமைப்புக்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்டதையும், பல தொகுதிகளில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்களினாலேயே ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் தோல்வியைத் தழுவவேண்டிப் போனதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஊழல் பூனைக்கு மணி கட்டிவிட்டீர்கள்; பக்குவமாக அதை ஒழித்தும் கட்டிடுங்கள்.

உங்களைப் போல நானும் தமிழ்த் தாயின் மடியில் தவழ்ந்தவன் என்ற ஒன்றைத் தவிர உங்களுக்கும் எனக்கும் வேறு எந்த பந்தமும் கிடையாது. இருந்தாலும் உங்களைப் போன்ற ஒரு அபூர்வ துருவ நட்சத்திரத்தை அரசியல் வானிலே காணும் போது, என்னைப் போன்ற தமிழ்த்தாயின் பிள்ளைகளின் நெஞ்சிலே ஒருவித நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் தமிழகத்திற்கு வெளியில்தான் வாழப்போகிறேன் என்றாலும், எனதருமைத் தமிழரின் வாழ்விலே உங்களால் ஒளி பிறக்காதா என்ற ஏக்கத்துடன் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆரம்பமாகட்டும் உங்களின் அரசியல் புனிதப் பயணம். "ஊழல் ஒழிந்தது விஜயகாந்தால்" என்று எழுதட்டும் நாளைய வரலாறு. நன்றி.

5 comments:

Ravikumar Veerasamy said...

நல்ல கட்டுரை. என்னை போன்ற சாமான்யனின் எதிர்பார்ப்பை அப்படியே படம் பிடித்தது போல எழுதியுள்ளீர்கள். என் சார்பாகவும், என்னை போன்ற மற்றவர் சார்பாகவும் பாராட்டுகள். தங்களை போலவே நானும் வியந்தேன், நிறையவே எதிர்பார்த்தேன். பழுத்த கட்சிகளை எதிர்த்து யாருடனும் கூட்டு சேராமல் மிகப் பெரிய வெற்றியை அவர் அடைந்ததற்கு காரணம் உங்களை என்னைப் போன்ற பலரின் எதிர்பார்ப்பே. ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறது. எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. தனி ஒரு மனிதனாக என் தலைவன் சட்டசபையில் என் மக்களுக்காக நாளும் குரல் குடுப்பான் என்று காத்திருக்கும் கண்மணி ஏமாந்து விடுவானோ? சட்டசபையில் தனியாக இருந்தாலும், அவருக்கு முதல் வரிசையில் இடம். இவ்வளவு இருந்தும், இப்போது எல்லாம் அவர் சட்டசபை கூட்டங்களுக்கு சரி வர செல்வதில்லை என்று செய்தி. கேட்டால் தொழில் ரீதியான காரணங்கள் சொல்கிறார். சட்டமன்ற உறுப்பினர் என்பது ஒரு முழு நேர அரசாங்க வேலை, தனி வீடு, சம்பளம் என அனைத்தும் உண்டு. இதுவும் அவர் விரும்பி எடுத்த தொழில்தான். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்க கூடாது. எடுத்த வேலையை சரிவர செய்ய அதில் முழுமையான ஈடுபாடு வேண்டும். இவரும் சட்டமன்றத்தை புறக்கணித்தால், இவருக்கும் மற்ற முன்னாள் தலைவர்களுக்கும் (செய்த அதே தவறுக்கும்) வித்தியாசம் இல்லாமல் போய் விடும். எனவே, சட்டசபை கூட்டஙகளுக்கு இனியாவது முக்கியத்துவம் அளிப்பாரா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பரே,
நன்கு எழுது இருக்கிறீர்கள்.
இதனைப் பற்றியெல்லாம் தலை வலிக்கும் அளவுக்கு சிந்தித்தாலும்,வாய் வலிக்கப் பேசினாலும் எதுவும் நடக்கும் எனத் தோன்றவில்லை.
தமிழ்நாட்டில் சீரிய,உறுதியான தலைமை மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
சரத்குமாரோ,விஜயகாந்தோ அதை செய்வார்களா என ஆவலுடன் அவதானித்துக் கொண்டிருக்கிறேன்...
உண்மையான அப்படிப்பட்டவர் அரசியலில் வந்தால் அது தமிழ்நாட்டுக்கு விமோசனம்...

Agathiyan John Benedict said...

நண்பர் ரவி அவர்களே, பதிவிட்ட உடனேயே பதிலிட்ட உங்களுக்கு மிக்க நன்றி. "எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகி விடுமோ" என்ற உங்களின் அச்சம் எனக்கும் வந்ததால்தான் இந்தக் கடிதத்தை பகிரங்கப்படுத்தினேன். அது என்னவோ எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கவேண்டும் என்பது வெளியில் தெரியாத விதி போலும் -:)

Agathiyan John Benedict said...

நன்றி திரு.அறிவன் அவர்களே.
// தலை வலிக்கும் அளவுக்கு சிந்தித்தாலும்,வாய் வலிக்கப் பேசினாலும் எதுவும் நடக்கும் எனத் தோன்றவில்லை //
உண்மைதான். ஆனால் இந்தக் கடிதம் செல்லவேண்டிய இடம்வரை சென்றது. அதாவது திரு. விஜயகாந்த் அவர்களை இக்கடிதத்தில் உள்ள செய்திகள் சென்றடைந்தன. என்னைப் போல் அவரைச் சுற்றியுள்ள ஒருசிலராவது இது போன்ற கருத்துக்களை அவரிடம் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் நடப்பு நிலைமை அவ்வளவு நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பதே என் உணர்வு.

Anonymous said...

It is inspiring and reflecting the reality of india.

All the best in your mission for Tamil people

God bless
Fr.Christy